மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடி மாத திருவிழா களைக்கட்டி பல்வேறு கோயில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திடசமுத்திம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில். இக்கோயிலில் ஆடி மாதம் 10 நாட்கள் ஆடி உற்சவம் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா கடந்த 12 -ம் தேதி புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் உற்சவம் தொடங்கியது.
தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி உற்சவம் நடைபெற்றது. தீமிதி விழாவை முன்னிட்டு சீர்காழி, மணிகூண்டு மங்கையர்க்கரசி விநாயகர் கோயிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். அதேபோல் அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை சென்றடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோயிலில் பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
EPS Speech: குறுவை சாகுபடி இல்லை என்றால் அரிசி விலை உயர்ந்துவிடும் - எச்சரிக்கும் எடப்பாடி பழனிசாமி
மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சமையல் கலைஞர்கள் சங்கத்தினர் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்து வழிபாடு!
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை சமையல் கலைஞர்கள் சங்கத்தினரின் 42 -ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து சக்தி கரகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தும் மஞ்சள் உடை உடுத்திய ஏராளமான பக்தர்கள் மற்றும் சமையல் கலைஞர்கள் பால்குடம் எடுத்து வீதி உலாவாக மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை முன்னே செல்ல, மேள தாள வாத்தியங்கள் முழங்க பால்குடம் எடுத்த பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
இதில் ஒரு பக்தர் நாதஸ்வர கலைஞர்கள் வாசித்த மகுடி ராகத்திற்கு ஏற்ப பாம்பு போல் படம் எடுத்து தரையில் உருண்டு வளைந்து நெளிந்து பக்தி பரவசத்தில் ஆடியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து பால்குடமானது கோயிலை வந்தடைந்தது. அங்கு பக்தர்கள் கொண்டுவந்த பாலைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கஞ்சிவார்த்தல் மற்றும் மாலை சந்தன காப்பு அலங்காரமும் மங்களப் பொருட்கள் வாங்குதல் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.