சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் 41வது ஆண்டு சபரிமலை யாத்திரையை ஒட்டி ஐயப்பன் ஆராதனை மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவை ஸ் ரீசாஸ்தா சேவா சமிதி மற்றும் ஆரியவைசிய ஸ்ரீ ஐயப்ப பூஜா மண்டலி ஆகியவை இணைந்து நடத்தினர். இதனையொட்டி கேரள மாநிலத்தில் நடைபெறுவது போன்று மிகப் பிரமாண்டமான ஆராட்டு விழா சேலத்தில் நடைபெற்றது. மயிலாட்டம், காவடி ஆட்டம், ஒயிலாட்டம், வான வேடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த ஆராட்டு விழாவில் 17 வாகனங்களில் பல்வேறு வகையான தெய்வங்களின் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு திரு வீதி உலா நடைபெற்றது. விநாயகர், முருகன், சிவன், அண்ணாமலையார், உண்ணாமலையார், பாபா ராம்தேவ் ஜி, பெருமாள், ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடவுள்கள் அலங்காரத்துடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. குறிப்பாக சிவவாந்தியங்கள், நாதஸ்வரம், கொப்பரை வாத்தியம், நாதர்கள், சங்கு முழங்க பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது.
ஒவ்வொரு அலங்காரத்திற்கு இடையே கேரளா செண்டை மேளங்கள் மற்றும் கேரள கதக்களி போன்ற நடனங்களும் இடம்பெற்றது. நிகழ்ச்சிகள் பங்கேற்ற ஒவ்வொரு அலங்காரமும் பார்வையாளர்களை பரவசத்துக்கு உள்ளாக்கியது. திருப்பதி, திருவண்ணாமலை, முத்துமலை முருகன், சமயபுரம், மாரியம்மன் கோவில்களில் வீற்றிருக்கும் அலங்காரங்களை போன்று தத்துவமாக அலங்காரங்கள் செய்யப்பட்டு காட்சிபடுத்தப்பட்டிருந்தது. ஊர்வலத்தில் குதிரைகள், யானை காளைமாடு, பசுமாடு, போன்றவை ஊர்வலத்தில் இடம்பெற்றன. ஊர்வலத்தில் இறுதியாக ஐயப்பன் புலி வாகனத்தில் சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டு கேரளாவில் நடைபெறவது போன்று ஐயப்பனை யானை மீது சுமந்து திரு வீதி உலாவரும் நிகழ்வை தத்துவமாக சேலத்தில் காட்சிப்படுத்தியது பக்தர்களை பரவசத்துக்கு உள்ளாக்கியது.
இந்த ஊர்வலம் செவ்வாய்பேட்டை, சந்தை பேட்டையில் இருந்து துவங்கி செவ்வாய்பேட்டையில் பஜார் வழியாக பல மணி நேரம் வந்து இறுதியாக கன்னிகா பரமேஸ்வரி கோவிலை அடைந்தது. இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அனைத்து இறைவனின் ஆசியையும் பெற்று சென்றனர். கேரளாவில் நடைபெறும் ஐயப்பனின் ஆராட்டு விழாவை போன்று சேலத்தில் ஆராட்டு விழாவை நடத்திக் காட்டியது ஐயப்ப பக்தர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த ஆண்டு முதன் முறையாக சேலத்தில் சபரிமலைகள் நடப்பது போல ஐயப்பனுக்கு சிறப்பு விழா நடத்தப்பட்டது. சபரிமலைக்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் பக்தர்களுக்கு சேலத்தில் இதுபோன்று நடந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக பக்தர்கள் கூறினார். மேலும் இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.