ஆவணி அவிட்டம் என்பது இந்து மதத்தில் ஆண்கள் மட்டுமே கடைபிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பௌர்ணமியை அடுத்து வரும் அவிட்ட நட்சட்த்திர தினத்தில் பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் மட்டுமே இந்த விரத்தை கடைபிடிக்கின்றனர். ரிக், யஜூர் வேதங்களை படிக்கும் பிராமணர்கள் இந்த நாளில் பூணூலை மாற்றிக் கொள்கின்றனர். சாம வேதம் படிப்பவர்கள் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பூணூல் மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆவணி அவிட்டம் நாளில் ஆற்றங்கரையிலோ அல்லது குளத்தின் கரையிலோ குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நடைமுறையும் உள்ளது.
முன்னோர்களின் வழிபாட்டிற்கு பிறகு பூணூலை மாற்றிக் கொண்டு தங்கள் வேதங்களை படிக்க தொடங்குவார்கள். இதுவே சமஸ்கிருதத்தில் உபகர்மா என்று சொல்லப்படுகிறது. உபகர்மா என்பதற்கு தொடக்கம் என்று அர்த்தம். இந்த உபகர்மாவே தமிழில் ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி அவிட்ட நாளில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது ஐதீகம். இந்த ஆவணி அவிட்ட நாளில் தான் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவர், அசுரர்கள் திருடிவந்த வேதத்தை மீட்டு வந்து அவற்றை புனிதப்படுத்தியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
அதனால் தான் இந்த பூணூல் மாற்றிக்கொள்ளும் சடங்கு மற்றும் வேதங்கள் படிக்கும் முறையும் ஏற்பட்டது. எனவே இந்த நாள் ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆவணி அவிட்டம் இன்று ஆகஸ்ட் 30 கடைப்பிடிக்கப்பட்டு. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவிரி ஆற்றின் கரையில் ஏராளமானோர் ஆவணி அவிட்டத்தை கடைபிடித்து, வைதீக முறைப்படி பூணூல் அணியும் சடங்கு நடத்தினர். பின்பு காயத்ரி மந்திரத்தை ஓதி, வழிபாடுகள் செய்தனர். வேத பாராயணம் செய்யவும், வேதங்கள் ஓதும் போது ஏற்படும் சொல் குற்றங்கள் பொருள் குற்றங்களை நீக்கும் சடங்காகவும், பூணூல் மாற்றும் வைபவம் நடைபெற்று வருகிறது.
பழைய பூணூலை அகற்றிவிட்டு வேதியர்கள் வழிகாட்டுதல்படி மந்திரங்கள் ஓதி புது பூணூல் அணிந்து கொண்டனர். உபாகர்மா எனப்படும் பூணூல் அணிவது, வேத கல்வி ஆரம்பிப்பது இந்த நாளில் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. இதுபோல் பிராமணர்கள் அல்லாத வன்னிய குல சத்திரியர்களை சார்ந்த 25 -க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் பூணூல் அணிந்து கொண்டனர்.