மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ-ல் 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, 10 ஆண்டுகளுக்கான பொதுத் தேர்வு மாதிரி வினாத் தாள்களை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதைப் பெறுவது எப்படி என்று பார்க்கலாம். 


பொதுத் தேர்வுகள் எப்போது?


சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளில் 2023- 24-ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் சிபிஎஸ்இ சார்பில் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன. சுமார் 55 நாட்களுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகள், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெறலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்து இருந்தது. எனினும் இறுதியான, துல்லியமான தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ இதுவரை வெளியிடவில்லை. 


இந்த நிலையில், 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், 10 ஆண்டுகளுக்கான பொதுத் தேர்வு மாதிரி வினாத் தாள்களை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி, 2013- 14ஆம் கல்வி ஆண்டில் இருந்து, 2023- 24ஆம் கல்வி ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கான வினாத் தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன. 


இவற்றை ஆசிரியர்களும் மாணவர்களும் cbseacademic.nic.in என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


பெறுவது எப்படி?


* மாணவர்கள் cbseacademic.nic.in என்ற இணைய தள முகவரிக்குச் செல்லவும். 


* அதில், sample question paper  என்னும் பகுதியை க்ளிக் செய்யவும். 


* அதில், 2023- 24 முதல் 2014- 15 வரை மாதிரி வினாத் தாள்கள் தோன்றும். 


* 2023- 24 ஆம் ஆண்டுக்கான மாதிரி வினாத் தாளைப் பெற,  SQP 2023-24 பகுதியை க்ளிக் செய்யவும். 


* எந்த வகுப்போ அதைத் தேர்வு செய்யவும். உதாரணத்துக்கு, 10 அல்லது 12ஆம் வகுப்பை க்ளிக் செய்யவும்.


* அதில் பாட வாரியாகத் தோன்றும் மாதிரி வினாத் தாள்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


மதிப்பெண்கள் கணக்கிடும் முறையும் அதில் உடன் இருக்கும். தேர்வு முறை எப்படி இருக்கும் என்ற தெளிவான புரிதலை, இந்த மாதிரி வினாத் தாள்கள் ஏற்படுத்தும். 


2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு மாதிரி வினாத் தாள் இணைப்பு-  https://cbseacademic.nic.in/SQP_CLASSX_2023-24.html (பாட வாரியாக)


2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு மாதிரி வினாத் தாள் இணைப்பு - https://cbseacademic.nic.in/SQP_CLASSXII_2023-24.html  (பாட வாரியாக)


தமிழக மாணவர்களுக்கு எப்போது?


தமிழக மாநில பாடத்திட்டத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஆண்டு மார்ச் 18ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதியும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.


முன்னதாக, 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் நேரடி சேர்க்கையைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் சேர்க்கைப் பணிகள் முடிக்கப்பட வேண்டும். சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் தகவல் திரட்டப்பட்டு, பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பும் பணியும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 


இதையும் வாசிக்கலாம்: TAHDCO Free Training: வெளிநாட்டில் படிக்க இலவசப் பயிற்சி வகுப்புகள்; மாணவர்கள் கலந்துகொள்வது எப்படி?