திருவோண நட்சத்திரத்தையொட்டி ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீபெருந்தேவி தாயாருடன் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 

திருவோண நட்சத்திரம்

 

கோயில் நகரத்தின் திவ்ய தேசங்களில், ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் , சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி திருவடி கோயில் வரை சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  பின் , ஸ்ரீ பெருந்தேவி தாயார் ராஜகோபுரம் முன்பு, ஸ்ரீ வரதராஜ பெருமாள் முன்பு தோன்றி , இரட்டை புறப்பாடு மற்றும் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது.

 



இதனைத் தொடர்ந்து ஆலயம் வலம் வந்து மீண்டும் சன்னதிக்கு சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் மற்றும் ஸ்ரீ பெருந்தேவி தாயாரை சேவித்து அருள் பெற்றனர். திருவோண நட்சத்திரத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசித்தால் பல நன்மைகள் தீட்டும் என்பது ஐதீகம்  இந்த உற்சவத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காத்திருந்து வரதராஜ பெருமாள் மற்றும் தாயாரை தரிசித்து விட்டு சென்றனர்.




 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வரலாறு சுருக்கம் ( varadharaja perumal temple, Kanchipuram)

 

அத்தி வரதர் உற்சவம் புகழ்பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில், சொல் வழக்காக வரதராஜ பெருமாள் கோவில்,  திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ( Divya Desam ) 43 வது திவ்ய தேச தலமாக போற்றப்படுகிறது. இக்கோவில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது. பெருமாள் கோவில் என்றும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. பெருமாள் குடி கொண்டிருப்பதால் இந்த இடத்திற்கு விஷ்ணு காஞ்சி என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தலம் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ( astagiri and Attiyuran ) ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது.



காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன் கோவிலுடன் இந்த கோவிலும் சேர்த்து மும்மூர்த்திவாசம் என குறிப்பிடுகிறார்கள். வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்பொழுது காட்சியளிக்கும், மூலவர் உருவர் கல்லால் ஆனது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதராஜ பெருமாளே இத்தளத்தில் காட்சி அளித்ததாக நம்பப்படுகிறது. இந்த சிலை அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே,  இந்த அத்தி மரத்தால் செய்யப்பட்ட வரதராஜ பெருமாளை  48 நாட்கள் மட்டுமே காண முடியும் என்பது கோவிலின் கூடுதல் சிறப்பு.