மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீ நடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கடந்த 28 -ஆம் தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. கோயிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தது.  திருவாதிரை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது. 

Kapil Dev Birthday: இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்.. உலகக் கோப்பை கனவை உள்ளங்கையில் ஏந்தியவர்.. கபில்தேவ் பிறந்தநாள் இன்று!

இதனை முன்னிட்டு அதிகாலை 3.30  மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு தேகசௌந்தரி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு  பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு யாகசாலையில் இருந்து ரட்சை பெற்று வைக்கப்பட்டு சோடஷ உபச்சாரமும், மேளதாளம் முழங்க மகாதீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. பூஜைகளை சதாசிவம் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு பாவை நோன்பு உற்சவத்தின் ஒன்பதாம் திருநாளாக சுவாமி அம்பாள் எதிர் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை உற்சவம் பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். சதய நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த விழா, திருவாதிரை திருநாளான  இன்று நிறைவு பெறுகிறது. இந்த உற்சவத்தில் தினசரி திருவெம்பாவையின் 20 பாடல்கள் பாராயணம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. சிவபக்தியில் சிறந்த இளைஞன் தனக்கு மணமகனாக வர வேண்டும் என கன்னியர்கள் வழிபாடு நடத்துவதால் இந்த 10 நாள் உற்சவம் பாவை நோன்பு எனப்படுகிறது. 

உற்சவத்தின் ஒன்பதாம் திருநாளான நேற்று இரவு நடராஜர் சன்னதியின் முன்பு மாயூரநாதரும், அபயாம்பிகை அம்மனும் எதிரெதிரே ஊஞ்சலில் எழுந்தருள செய்யப்பட்டு எதிர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது, மாணிக்கவாசகர் உற்சவம் மூர்த்திகளின் சிலை முன்பு ஓதுவார்கள் திருவெம்பாவையின் 20 பாடல்களையும் பாராயணம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பத்தாம் திருவிழா ஆன இன்று  நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.