இந்திய கிரிக்கெட் அணியை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கபிலின் பிறந்தநாளில், அவரது சர்வதேச வாழ்க்கை எப்படி இருந்தது மற்றும் அவரது சில சிறப்பு பதிவுகளை பார்ப்போம். 


கபில்தேவ் 1978 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். ஆனால், முதல் போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு அவரால் செயல்பட முடியவில்லை. ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான கராச்சி டெஸ்டில் வெறும் 33 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் கபில் தான் முழுநேர ஆல்ரவுண்டர் என்பதை நிரூபித்தார். 


1982ல் கேப்டனான கபில் தேவ்:


பந்து மற்றும் பேட்டிங்கில் கபில்தேவின் நிலையான செயல்பாட்டிற்குப் பிறகு, அவர் 1982 இல் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த தொடரின் ஒரு போட்டியில் கபில் இன்னிங்ஸ் விளையாடி 72 ரன்கள் எடுத்து அணியை வென்றார். இந்த வெற்றிதான் உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை இந்திய அணிக்கு அளித்தது. 


உலகக் கோப்பையில் 175 ரன்கள்: 


1983 உலகக் கோப்பை அணியில் இருந்த யாரைக் கேட்டாலும் சொல்வார்கள், கபில் தேவ் மட்டும்தான் ஆரம்பத்திலிருந்தே `நம்மால் உலகக் கோப்பை வெல்ல முடியும்’ என உறுதியாக நம்பினார் என்று. அதீத நம்பிக்கைக்குக் காரணம் உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வீழ்த்தியதுதான். 1983 உலகக் கோப்பை லீக் சுற்றிலும் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வீழ்த்தியிருக்கிறது. ஆனாலும், உலகக் கோப்பை போட்டிகளை கவர் செய்ய இங்கிலாந்து சென்ற இந்திய நிருபர்களே, மேற்கு இந்திய அணி இந்தியாவைத் தோற்கடித்து விடும் என்று இந்திய அணியைக் குறைத்து மதிப்பிட்டிருந்தனர். ஆனால், இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் அணியை வீழ்த்தியது.


இதனையடுத்து இந்திய அணி, ஜிம்பாப்வே உடன் துவக்க பேட்டர்கள் மோசமாக விளையாடி கொண்டிருந்தனர். பின்னர் கபில் தேவ் களமிறங்கிய சில நிமிடங்களில் அடுத்த விக்கெட் விழுந்தது. இறுதியில் பந்துவீச்சாளார்களுடன் ஜோடி சேர்ந்து போராடினார் கபில் தேவ். அடித்து ஆடக் கூடியவர், அன்று அவர் அப்படியில்லை. நிதானமாக இருந்தார். அடித்து ஆடுவதை விட ஒன்று, இரண்டு என ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழக்கக்கூடாது என்பதிலேயே கவனமாக ஆடி சதம் அடித்தார். இதுதான் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார். அந்தச் சாதனை 14 ஆண்டுகள் நீடித்தது. கபில் தேவ் 175 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இந்தியாவுக்கு 266/8 ரன்கள் எடுக்க போராடி அப்போட்டியில் வெற்றிபெற வைத்தார்.


1983 உலகக் கோப்பையில் கபில் தேவ் பங்கு:


1983 உலகக் கோப்பையில், கபில் பந்து மற்றும் மட்டை இரண்டிலும் அற்புதங்களைச் செய்தார். இதனுடன், அவரது பீல்டிங்கும் ஈடு இணையற்றது. கபில் 8 போட்டிகளில் 60.6 சராசரியில் 303 ரன்கள் குவித்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இத்துடன் ஏழு கேட்சுகளையும் பிடித்தார்.


400 விக்கெட்கள் மற்றும் 5000 ரன்கள்: 



  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்களுக்கும் மேல் 400 விக்கெட்டுகளுக்கும் மேல் எடுத்த உலகின் ஒரே கிரிக்கெட் வீரர் கபில்தேவ்.

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான பந்துவீச்சாளர் கபில். அவர் 434 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.   

  • இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்ற முதல் கேப்டன் கபில்தேவ்.

  • 2002 ஆம் ஆண்டு விஸ்டனால் நூற்றாண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக கபிவ் தேவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.