விநாயகர் சதுர்த்தி:


இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்து விழாக்களில் பல்வேறு பண்டிகைகள் வந்தாலும், பலரும் கொண்டாட கூடிய விழாவாக விநாயகர் சதுர்த்தியும் இருந்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு பகுதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவர். அதேபோன்று விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 


விநாயகர் பிறந்த நாளை முன்னிட்டு அவரவர் வீடுகளில் சிலை வைத்து கொண்டாடுகின்றனர் ‌. ஆனால் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, கோயில்களிலும், பொது இடங்களிலும், பல்வேறு அமைப்பு சார்பாக விநாயகர் சிலை வைத்து வணங்கப்படுவதையும் பார்க்க முடிகிறது.




கோலாகல கொண்டாட்டம்:


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் பிரபல விநாயகர் கோயில்களான காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயில், திருச்சி உச்சிபிள்ளையார் கோயில், பாண்டிச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் கோயிலில்களில் காலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேங்களும், வழிபாடுகளும் நடைபெற்றது.


அம்பானி குடும்பம் 20 கிலோ தங்கம் நன்கொடை:


இந்நிலையில், விநாயக சதுர்த்தியை முன்னிட்டு , மும்பையின் லால்பாக்சா ராஜா விநாயகர் கோயிலுக்கு ஆனந்த் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் ரூ. 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, இந்த விநாயகர் மிகவும் பணக்கார விநாயகராக மாறியுள்ளது என்றே சொல்லலாம். இந்த விநாயகரை, பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்தும் வியந்தும் தரிசித்தும் செல்கின்றனர்.






மேலும், இந்த விநாயகர் புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது.


அனந்த் அம்பானி, கடந்த 15 ஆண்டுகளாக லால்பாக்சா ராஜா குழுவுடன் இணைந்து , பல்வேறு உதவிகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.  லால்பாக்சா ராஜா குழுவின் நிர்வாக ஆலோசகராகவும் அனந்த் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.


கொரோனா நோய் தொற்று நோய் போது, ​​லால்பாக்சா ராஜா குழு சமூகப் பணிகளுக்கான நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டது. ஆனந்த் அம்பானி முன்முயற்சி எடுத்ததை தொடர்ந்து, அந்த குழுவிற்கு குறிப்பிடத்தக்க உதவிகளை வழங்கினார் எனறு கூறப்படுகிறது.


இந்நிலையில், அம்பானி குடும்பம் வழங்கிய தங்க கிரீடமானது ,பேசுபொருளாகியுள்ளது என்றே சொல்லலாம்.