தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும் சுருளி அருவி சிறந்த சுற்றுலா தலம், ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக புண்ணிய ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் மாதந்தோறும் அமாவாசையன்று இந்த அருவியில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்படி, இன்று அமாவாசை தினத்தால் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக சுருளி அருவி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வரும் மக்கள் சுருளி அருவியில் புனித நீராடிய பின் திதி, தர்ப்பணம் செய்வது வழக்கம் ஆனால் தற்போது சுருளி அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் உள்ள முல்லை பெரியாறு ஆற்றங்கரையோர பகுதிகளில் மக்கள் வழிபாடு செய்தனர்.
முல்லை பெரியாறு ஆற்றங்கரையோரத்தில் குளியலிட்ட பின்பு சுருளி ஆண்டவர், சுருளி வேலப்பர், விபூதி குகை கோவில், ஆதி அண்ணாமலையார் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து சுருளி ஆற்றங்கரையில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஹைவேவிஸ் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அங்குள்ள தூவானம் ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் சுருளி அருவிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர கம்பம் பகுதியிலும் மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதனால் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அருவியில் நீர்வரத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் சுருளி அருவியில் அடிக்கடி யானை கூட்டம் வந்து செல்வதால் அதையும் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.