தஞ்சாவூர்: தஞ்சையில் அட்சய திருதியை ஒட்டி பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


அட்சய திருதியை என்றால் என்ன?


சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை “அட்சய திருதியை” என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது, பெருகுவது என்று அர்த்தம். அப்படியாக அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அந்தப் பொருள் மிகவும் பெருகி வளம் சேர்க்கும். குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தரும் திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது.


குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள்
 
தர்மர் சூரிய பகவானை வேண்டி அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும், இவ்வளவு ஏன் சிவபெருமான் அன்னபூரணித் தாயாரிடம் தனது பிச்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் இந்நாளில் தான். பகவான் பரசுராமர் அவதரித்த  நாள், புனித நதி கங்கை பூமியை தொட்ட நாள், குசேலர் கிருஷ்ண பகவானை சந்தித்த நாள், ஆதி சங்கரர் செல்வத்தை கொட்டிக் கொடுக்கும்  ஸ்லோகமாகிய கனகதாரா ஸ்தோத்திரத்தை இயற்றிய நாள், குபேரன் இழந்த செல்வங்களை மீட்ட நாள், திரேதா யுகம் ஆரம்பமான நாள்,  வியாசர் மஹா பாரதம் எழுத ஆரம்பித்த நாள்.




எந்த பொருள் வாங்கினாலும் பல மடங்கு பெருகும்


இந்நாளில் தங்கம் மட்டும் வாங்காமல் உப்பு, அரிசி, ஆடைகள் மற்றும் விலை உயர்ந்த எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பலமடங்கு பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினத்தில் புதிய தொழில் தொடங்கலாம். பூமி பூஜை செய்வதற்கு உகந்த நாள். ஏழைகளுக்கு தானம்  செய்யலாம். அன்றைய தினம்‌ கல்‌ உப்பு. மஞ்சள்‌ வாங்கினாலும்‌ தங்கம்‌ வாங்குவதற்குரிய பலன்கள்‌ கிடைக்கும்‌. நம்முடைய வீட்டில்‌ செல்வம்‌ பெருகும்‌.  நேற்று அதிகாலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்கியது. இன்று 11ம் தேதி மதியம் 2:50 மணிக்கு நிறைவடைகிறது. 10ம் தேதி மற்றும் 11ம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் காலை 5:33 முதல் மதியம் 12:18 வரை தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவது ஆண்டு முழுவதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் நேரமாகும். இத்தகைய சிறப்பு மிக்க அட்சய திருதியை நாளில் தஞ்சையில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.                                                                                                  


மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


தஞ்சாவூர் கீழராஜ வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இங்கு மட்டுமே மகாலட்சுமி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு பக்தர்கள் பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி மற்றும் பஞ்சமி திதி தோறும் ஐந்து தீபமேற்றி உப்பு மற்றும் இனிப்பு சமர்ப்பணம் செய்து அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்பது ஐதீகம். கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் இன்று அட்சய திருதியை முன்னிட்டு 16 வகை செல்வங்களை வாரி வழங்கும் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


ராஜகோபால சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு


இதேபோல் தஞ்சாவூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள ராஜ கோபாலசுவாமி கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு சுதர்சன வல்லி மற்றும் விஜய வல்லி சமேதராக சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்தனர்.  மேலும் தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை மாமணிகோவில் நீலமேகப் பெருமாள் கோவிலில் அட்சய திருதியை முன்னிட்டு ஆண்டாளுடன் நீலமேகப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதேபோல் பல்வேறு கோவில்களிலும் அட்சய திருதியை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.