மண்டையை பிளக்கும் கத்தரி வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. வழக்கமாக சித்திரை மாதம் 21ம் நாள் முதல் வைகாசி மாதம் 14-ந் தேதி வரையிலான 21 நாட்களே அக்னி நட்சத்திர காலம் ஆகும். அதன்படி இந்த வருடம் மே மாதம் 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியுடன் முடிவடைகிறது.


அக்னி நட்சத்திர காலகட்டத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்று ஆன்மீக பெரியோர்கள் கூறியுள்ளனர். பொதுவாக இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் செவ்வாயின் ஆட்சி வீடு என்பதால் நெருப்பு கிரகமான சூரியன் மேஷத்தில் சஞ்சாரிக்கும்போது வெயில் உக்கிரமாக தகிக்கிறது. இந்த அக்னி நட்சத்திர காலம் சித்திரை மாதத்தில் வருவதால் இந்த மாதத்தின் சுபகாரியங்களும் பெரும்பாலும் நடத்துவதில்லை.


செய்யக்கூடாதவை:



  • அக்னி நட்சத்திர காலகட்டத்தில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது.

  • அக்னி நட்சத்திர காலத்தில் விதை விதைத்தல், கிணறு, குளம் தோண்டுதல், தோட்டங்கள் அமைத்தல் செய்யக்கூடாது.

  • நிலம், வீடுகளில் புதியதாக பராமரிப்பு பணிகளை தொடங்கக்கூடாது.

  • இந்த காலகட்டத்தில் காது குத்துதல், தலைமுடியை காணிக்கையாக செலுத்துதல், கிரகப்பிரவேசம் செய்தல் செய்யக்கூடாது.

  • நிலம் வாங்கி வீடு கட்டத் தயாராக இருப்பவர்கள் பூமி பூஜையை அக்னி நட்சத்திர காலகட்டத்தில் செய்யக்கூடாது.


என்ன செய்யலாம்?


அக்னி நட்சத்திர காலகட்டத்தில் திருமணம், நிச்சயதார்த்தம், சீமந்தம், பெண் பார்த்தல் உள்ளிட்ட சுபகாரிய செயல்களில் ஈடுபடலாம் என்றே கூறப்படுகிறது. இருப்பினும், சித்திரை மாதத்தை காட்டிலும் அடுத்து வரும் வைகாசி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் அந்த மாதத்திலே திருமணம் போன்ற விஷேச காரியங்களை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதேபோல, சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தால் அதை அக்னி நட்சத்திர காலத்தில் தொடர்வதிலும் எந்த தவறும் இல்லை.


அக்னி நட்சத்திர காலத்திற்கும் ஆடி மாதத்திற்கும் தொடர்பு உண்டு. ஏனென்றால், ஆடி மாதத்தில் ஒரு பெண் கருத்தரிக்கும்போது அந்த பெண்ணிற்கு குழந்தை சித்திரை மாதத்தில் அதாவது அக்னி நட்சத்திரத்தில் பிறக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அக்னி நட்சத்திர காலத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகள் உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும் என்பதாலும், பெண்களுக்கு பிரசவத்தின்போது சிரமம் ஏற்படும் என்றும் என்பதாலே ஆடி மாதம் புதியதாக திருமணமான தம்பதிகளை பிரித்து வைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.  


நடப்பாண்டிற்கான அக்னி நட்சத்திரம் மே மாதம் 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த அக்னி வெயில் காலகட்டத்தில் பருத்தி ஆடைகளை அணிவதும், வெளியில் செல்லும்போது குடைகளை எடுத்துச் செல்வதும் மிகவும் நல்லது ஆகும்.


மேலும் படிக்க:  Agni Natchathiram 2024 Dates: கத்திரி வெயில் எப்போது தொடக்கம்? பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?