காஞ்சிபுரம் மாவட்டம்  வாலாஜாபாத் அடுத்துள்ள சிங்காடிவாக்கம் கிராமத்தில், மிகவும் பழமையான புராதான கோவிலான திரிபுரசுந்தரி சமேத திருவாலீசுவரா் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னிதியில் சுமாா் 200 ஆண்டுகளுக்குப் பிறகு கந்த சஷ்டி திருவிழா, இந்த மாதம் 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு மேலாகவே சில காரணங்களால் கோவிலில் கந்த சஷ்டி தொடர் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.



 

கந்த சஷ்டி விழாவையொட்டி, தினமும் காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான வள்ளி, தெய்வானை சமேத முருகன் ஐம்பொன் சிலைகள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் சிலைப் பாதுகாப்பு அறையிலிருந்து, எடுத்து வரப்பட்டு, நன்னீராட்டு விழா நடைபெற்றது. இதனை அடுத்து  கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் முருகனுக்கு வள்ளி- தெய்வானையுடன் ஆகம விதிகளின்படி, திருக்கல்யாணம் நடைபெற்றது. 

 



 

திருக்கல்யாணம் வைபவத்திற்கு  முன்னதாக, முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகளுடன், சீா்வரிசைப் பொருள்கள் திருவாலீஸ்வரா் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டு வரப்பட்டன. 200 ஆண்டுகளுக்கு பின்னா், வைபவம் நடைபெறுவது குறித்து அந்தக் கிராம முதியவா் ஒருவா் கூறுகையில், கந்த சஷ்டி விழா நடைபெற்றதாக எனது முன்னோா் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னா் சூரசம்ஹாரம் கோயிலுக்கு உள்ளே நடைபெற்றது. தற்போது கிராம மக்கள் ஆா்வத்தால் 200 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கந்த சஷ்டி விழாவும், திருக்கல்யாணமும் நடைபெற்றது மகிழ்ச்சிளிக்கிறது என்றாா்.

 

விழா நிறைவு பெற்றதும், திருவாலீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான ஐம்பொன் சிலைகள், ஏகாம்பரநாதா் கோயிலில்  ஒப்படைக்கப்படும் என்று கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். சுமார் நீண்ட வருடங்களுக்குப் பிறகு, இந்த விழா நடைபெற்று இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ  வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண வைபவம்.

 

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் நகரியத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரம் செய்ய கோவில் விழா குழுவினரால், முடிவு செய்யப்பட்டு நேற்றைய தினம் முதல் முறையாக நகரியம் அமைந்த காலகட்டத்தில் சூரசம்ஹார விழா சதுரங்கப்பட்டினம் ஶ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம் எதிரே கடற்கரையில் நடைபெற்றது .

 

அதனைத் தொடர்ந்து சஷ்டி விரதத்தின் ஏழாம் நாளான இன்று சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் குழுவினர் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது இதில் நகரிய மக்களுடன் சுற்றுப்புற கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.