சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள். 




சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினாள் என்பது ஐதீகம். அதேபோன்று பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி உள்ளிட்ட ஜீவநதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவங்களை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் துலா உற்ச்சவம் கொண்டாடப்பட்டு  வருகிறது.




சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு துலாக்கட்ட காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.  அந்த வகையில் இந்த ஆண்டு நேற்று ஐப்பசி மாதம் 1-ம் தேதி துலா உற்ச்சவம் தொடங்கியது. இதனை முன்னிட்டு  ஐய்யாரப்பர், வதான்யேஸ்வரர், காசிவிஸ்வநாதர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு துலாக்கட்ட காவிரியின் இரு கரைகளில் அஸ்த்திர தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதில் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குருமா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சரிய சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.  இம்மாதம் முழுவதும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் புனித நீராடி செல்வது வழக்கம். 




இந்நிலையில் மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெறும் பிரசித்தி பெற்ற துலா உற்சவத்தை முன்னிட்டு வேளாக்குறிச்சி ஆதீனம் காவிரியில் புனித நீராடி வழிபாடு மேற்கொண்டார்.  அவ்வகையில் இன்று காலை தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், ஆதீன இளவரசு  அஜபா நடனேஸ்வர சுவாமிகள் ஆகியோர் துலாஸ்தானம் செய்ய காவிரியின் வடக்கு கரைக்கு வந்தனர். 




அவர்களுக்கு, தருமபுரம் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் கலந்துகொண்டு ஆதீனத்திற்குச் சொந்தமான மயிலாடுதுறை வதான்யேஸ்வர சுவாமி திருக்கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு சங்கல்ப ஸ்நானம் செய்துவைக்கப் பெற்றது. தொடர்ந்து அவர்கள் காவிரியில் புனித நீராடி காவிரி கரையில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஐப்பசி 30 அன்று கடைமுக தீர்த்தவாரி வெகுவிமரிசையாக நடைபெற்ற உள்ளது.