Aadi Pooram Viratham in Tamil: ஆடிப்பூரம் விரதம் எப்போது, எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
ஆடிப்பூரம் விரதம்:
ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திரம் வருவது வழக்கம் தான். ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் தான், உமாதேவி மற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதரித்தாகவும் நம்பப்டுகிறது. இதன் காரணமாக ஆடிப்பூரமானது சைவம் மற்றும் வைணவம் என இரண்டு தலங்களிலும் கொண்டாடப்படுகிறது. அனைத்து அம்மன் கோயில்களிலும், பெருமாள் கோயில்களிலும் ஆடிப்பூரம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் விரதம் இருந்து, அம்பாளை வழிபட்டால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் பூர நட்சத்திரம் இன்று மாலை 6.42 மணிக்கு தொடங்கி, நாளை அதாவது 7ம் தேதி இரவு 9.03 மணி வரை நீடிக்க உள்ளது.
வழிபடுவதற்கான நேரம்:
புதன்கிழமையான நாளை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை எமகண்டமும், நண்பகல் 12.00 மணி முதல் 1.30 மணி வரை ராகு காலமும் கடைபிடிக்கப்படுகிறது. எனவே இந்த குறிப்பிட்ட நேரத்தை தவிர, மற்ற நேரம் முழுவதும் ஆடிப்பூரம் விரதத்தை பக்தர்கள் மேற்கொள்ளலாம். அதோடு, 06.00 முதல் 07.15 வரையிலும், 09.05 முதல் 10.20 வரையிலும், வழிபாடு நடத்த உகந்த நேரமாக கருதப்படுகிறது.
அம்மனுக்கு வளைகாப்பு:
உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. எனவே, ஆடிப்பூரம் நாளில் சிவ ஆலயங்களில் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவது வாடிக்கையாக உள்ளது. உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். அப்போது, தாய்மை பேறுக்காக தவமிருக்கும் பெண்கள் அன்னைக்கு வளைகாப்பு நடத்துவதற்காக வளையல்களை வாங்கிக் கொடுத்து தங்களுக்கும் விரைவில் வளைகாப்பு நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள். பூஜையில் சமர்பிக்கப்படும் வளையல்களை பெண்கள் அணிந்தால், வேண்டியது நிறைவேறும் என நம்பபப்படுகிறது.
வீட்டில் வழிபடுவது எப்படி?
- வீட்டில் ஒரு மனைப்பலகையை கிழக்கு-மேற்காக போட்டு, அதன் மீது கோலமிடுங்கள்
- சிவப்பு நிறத்துணி இருந்தால் அதனை மனை மீது விரித்துக் கொள்ளலாம்
- மனைப்பலகையில் ஏதாவது ஒரு அம்மனின் படத்தை வைத்து, அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து, பூப்போட்டு அலங்காரம் செய்யலாம்
- அம்மன் படத்திற்கு முன் வளைகாப்பிற்கு சீர் வைப்பது போல் சந்தனம், குங்குமம், வளையல், அட்சதை, பூ ஆகியவற்றை தனித்தனி தட்டுகளில் வையுங்கள்
- அம்மனுக்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள் சொல்லி, அம்மனை வழிபடலாம். அபிராமி அந்தாதியும் படித்தவாறும் மனமுருகி வழிபடலாம்
- பிறகு அட்சதை, பூ ஆகியவற்றை அம்மனின் காலடியில் சமர்பித்து வழிபட வேண்டும்
- இறுதியாக அம்மனுக்கு ஆரத்தி கரைத்து திருஷ்டி கழிக்க வேண்டும்
- தொடர்ந்து அந்த மனைப்பலகையை வீட்டின் கூடத்திற்கு எடுத்து வந்து யாருக்கு திருணம் ஆக வேண்டுமோ அல்லது யாருக்கு குழந்தை வேண்டுமோ அவர்களை அமர வைத்து, அம்மனுக்கு செய்தது போல் நலங்கு வைத்து, ஆரத்தி காட்ட வேண்டும்.
- அட்சதை, பூக்களை தூவி வாழ்த்திய பிறகு அந்த பெண்ணின் கைகளில் வளையல்கள் மாட்டி விட வேண்டும். அம்மனின் இடத்தில் அமர்வதால், வேண்டுதல் நிறைவேற நிச்சயம் அம்மன் அருள் செய்வாள் என நம்பப்படுகிறது.
- பிறகு அப்படியே எழுந்து சென்று பூஜை அறையில் அம்மனிடம் வேண்டிக் கொண்டு, அம்மனின் முன்பு விழுந்து வணங்க வேண்டும்.
- தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து, குழந்தை வரம் வேண்டும் பெண்ணின் முந்தானையில் நிரப்பி, பூஜை அறையில் சென்றும் வழிபடலாம்.
கோயிலிலும் வழிபாடு செய்யலாம்:
குழந்தை வரம் வேண்டும் பெண்கள் அம்மன் கோயிலுக்குச் சென்று, ஈரப்புடவையுடன் அங்குள்ள மரத்தை சுற்றி வர வேண்டும். பிறகு முந்தானையில் இருந்து சிறிதளவு கிழித்து, அதில் ஒரு கல் அல்லது மஞ்சள் கிழங்கு வைத்து கோயில் மரத்தில் கட்டலாம். அல்லது கோயிலில் விற்கும் தொட்டிலை வாங்கி, அம்மனிடம் வைத்து பூஜை செய்து விட்டு, பிறகு மரத்தில் கட்டி விட்டு வரலாம்.
பிரதான பலன்கள் என்ன?
- ஆடிப்பூரம் நாளில் அம்மன் சிலைக்கு முன்பாக வைத்து வழிபட்ட வளையல்களை அணிந்துகொண்டால், மனம்போல் மாங்கல்யம் அமையும் என நம்பப்படுகிறது
- திருமணம் ஆன பெண்களுக்கு மாங்கல்யம் நிலைத்து இருப்பதோடு, குழந்தை பாக்கியமும் பெறலாம் என கூறப்படுகிறது.