ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் திருக்கோவில் கும்ப படையல் இட்டு சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
 

கருக்கினில் அமர்ந்தவள் (  Karukinil Amarndha Amman Temple )



 

காஞ்சிபுரம்: கோவில் நகரமான காஞ்சிபுரம் மேட்டு தெரு அருகே  மகிஷாசுரனை வதம் செய்யும் திருக்கோலத்தில் காட்சி தரும் பழமையான பிரசித்தி பெற்ற அருள்மிகு கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இத்திருக்கோவிலில் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் திரளான பெண்கள் தங்கள் குடும்பத்தினர் உடன் வந்து பொங்கல் வைத்து படை எடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.



அதன்படி ஆடிப்பூரம் திருநாளான நேற்று கருக்கலில் அமர்ந்தவள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மலர்கள், வளையல், எலுமிச்சம் பழங்கள், ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் கருவறை முன்பு புளியோதரை, சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், உள்ளிட்டவை கும்பமாக படையல் இட்டு சிறப்பு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.



 

ஆடிப்பூரத்தை ஒட்டி கருக்கலில் அமர்ந்தவள் அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற கும்ப படையல் திருவிழாவில் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வணங்கி வழிபட்டு சென்றனர். சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கும்ப படையல் வைத்து படைக்கப்பட்ட புளியோதரை அன்னதானமாக வழங்கப்பட்டது.


 





 


 

ஆடிப்பூரம் ( aadi pooram )


 



ஆடி என்றாலே  திருவிழா   என்பதுதான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும் . அந்த அளவிற்கு ஆடி மாதம் முழுவதும் பல முக்கிய நாட்களைக் கொண்டுள்ளது. அந்த வகையில் ஆடிப்பூரம் என்னும் விழா  ஆடி மாதத்தில் வரும் பூச  நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் பொழுது  கொண்டாடப்படுகிறது.  இது அம்மனுக்குரிய திருநாளாக கருதப்படுகிறது.  ஆடி மாத வரும் பூச நட்சத்திரத்தில், இந்த விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இந்த நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.  

 

ஆடி மாதம்  பூச நட்சத்திரத்தில்  அம்மனுக்குரிய விசேஷ தினமாக கருதப்படுவதால், முனிவர்களும், சித்தர்களும், ஞானிகளும் இந்த நாளில் தான் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் பல புராணங்கள் எடுத்துரைக்கின்றன.  இதே ஆடிப்பூர நட்சத்திரத்தின் பொழுது , தான் பூமாதேவி  ஆண்டாளாக, அவதாரம் எடுத்தாள் என புராணங்கள் விளக்குகின்றன.  இதன் காரணமாக வைணவ தளங்களிலும்  ஆடிப்பூரும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூர விழா விமர்சையாக கொண்டாடப்படுவது மட்டுமில்லாமல் பால்குடம் எடுத்தால், அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்ளிட்ட விழாக்களும்  கொண்டாடப்பட்டு வருகிறது. திருமணமாகாத பெண்கள் இந்நாளில் ஆண்டாளை கும்பிட்டால் அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்பது நம்பப்படுகிறது.