தஞ்சாவூர்: தஞ்சாவூர் மற்றும் திருவையாறு உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நீர் நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பெருக்கு என்றால் பெருக்குதல் என்று பொருள். ஆடி மாதம் 18-ம் நாளை ஆடிப்பெருக்கு என்று அழைக்கிறோம். இந்த நாளில் தொடங்கும் செயல் அனைத்தும் பல்கிப் பெருகும் என்பதால் இதற்கு ஆடிப்பெருக்கு என்று பெயர். இந்நாளில் விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறுவடை செய்யலாம் என்பது தமிழர் மரபில் நீடித்திருக்கும் வழக்கம். இதன் அடிப்படையில் விவசாயத்துக்கு ஆதாரமான ஆறு, குளம், ஏரி மற்றும் நீர்நிலைகள் போன்றவற்றைப் போற்றும் விதமாகக் கொண்டாடப்படும் நாள் ஆடிப்பெருக்கு.
ஆடிப் பெருக்கு என்றதும் எல்லோருக்கும் காவிரிக்கரையில் செய்யப்படும் வழிபாடுகளே நினைவுக்கு வரும். ஆனால் காவிரிக்கரையில் உள்ளவர்கள் மட்டுமல்ல சகலரும் வழிபட வேண்டிய அற்புதமான திருநாள் இந்த ஆடிப் பெருக்கு.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி, தஞ்சாவூர் பெரிய கோயில் அருகில் உள்ள கல்லணை கால்வாய் மற்றும் திருவையாறு காவிரி கரை படித்துறையில் புனித நீராடிய புதுமண தம்பதிகள் தங்களது திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு, பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில் மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டு காவிரி தாயை வழிபட்டு வருகின்றனர்
ஆடிப்பெருக்கு விழா தமிழர்களின் பாரம்பரிய விழாவாக மட்டுமல்லாமல் காவிரி தாயை வணங்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்கள் மட்டும் வழிபடும் விழாவான ஆடிப்பெருக்கு விழா டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளில் கொண்டாடப்படுகிறது.
காவிரி ஆற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டு கரைபுரண்டு ஓடுவதால் திருவையாறு காவிரி கரை புஷ்பமண்ட படித்துறையில் ஏராளமானவர்கள் குவிந்து உள்ளனர்.
பழங்கள், காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு மற்றும் புதுமண தம்பதிகள் திருமண நாளில் அணிந்து இருந்த மாலை, தாலி ஆகியவற்றை வைத்து பூஜை செய்து சூரிய பகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டனர். பின்னர் பெண்கள் ஒருவருக்கு ஒருவர் கழுத்தில். மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டனர்.
மூத்த பெண்களிடம் இளம் பெண்கள் ஆசிர்வாதம் பெற்றனர். புதுமண தம்பதிகள் தாலியை புதிய மஞ்சள் கயிற்றில் கோர்த்து அணிந்து கொண்டு, திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்
தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.