ஆடி மாதம் பிறந்தது முதலே தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் விசேஷம் களைகட்டி வருகிறது. ஆடி மாதத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளான ஆடி 18 நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
ஆடிப்பெருக்கு:
விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பான இந்த நாளில் ஆடிப்பட்டம் தேடி விதை என்பது போல விவசாயிகள் தங்களது உழவுப்பணியை தொடங்குவார்கள். புதுமணத் தம்பதிகளுக்கான தாலி பிரித்துக் கோர்த்தல் நடைபெறும். காவிரி உள்ளிட்ட முக்கிய நதிகளின் கரைகளில் மக்கள் அலைகடலென திரண்டு மகிழ்ச்சியுடன் ஆடிப்பெருக்கை கொண்டாடுவார்கள்.
அக்ஷய திருதியை என்றாலே எப்படி தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதோ, அதேபோல ஆடிப்பெருக்கு தினத்திலும் தங்கம் வாங்குவதை வழக்கமாக உள்ளது. தங்கம் விற்கும் விலையில், ஆடிப்பெருக்கில் தங்கம் வாங்குவது என்பது அனைவருக்கும் சாத்தியம் இல்லை. ஆனால், விழாநாளான ஆடிப்பெருக்கு தினத்தில் தங்கத்திற்கு நிகரான மற்ற 2 பொருட்களை கட்டாயம் வாங்க வேண்டும்.
மங்களகரமான ஆடிப்பெருக்கு தினத்தில் தங்கம், வெள்ளி வாங்க இயலாதவர்கள் மஞ்சள், உப்பு வாங்க வேண்டும்.
மஞ்சள்:
மஞ்சள் என்றாலே மங்களகரம் என்பது பொருள். உணவிலும் சரி, சுப நிகழ்ச்சியிலும் சரி மஞ்சள் என்பது மிகுந்த மகத்துவம் ஆகும். வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் மஞ்சள் இன்றி சுப நிகழ்ச்சியான நிறைவு பெறாது. ஆடிப்பெருக்கு தினத்தில் மஞ்சள் கிழங்குகளை வாங்கி ஒரு பாத்திரம் நிறையும் அளவிற்கு வீட்டில் போட்டு வைக்க வேண்டும்.
வீடு, உடல் என அனைத்திற்கும் நன்மை தரும் மஞ்சளானது தங்கத்திற்கு நிகரானது ஆகும். சாதாரண கயிறாக இருந்தாலும், அதில் மஞ்சள் பூசிய பின்பு அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும், தங்கத்தில் செய்யப்பட்ட தாலியை தாங்குவதும் இந்த மஞ்சள் கயிறே ஆகும். அதனால், மிகுந்த மங்களகரமான மஞ்சளை நாளை மறுநாள் வாங்கி வீட்டில் உள்ள பாத்திரத்தில் நிரப்பி வையுங்கள். கட்டாயம் உங்கள் வீடுகளிலும், உங்கள் வாழ்விலும் நன்மை பெருகும்.
உப்பு:
மஞ்சளை போலவே மற்றொரு மங்களகரமான பொருள் உப்பு ஆகும். சமையலிலும் சரி, சுபகாரியத்திலும் சரி உப்பு தவிர்க்க முடியாத பொருள் ஆகும். உப்பானது மகாலட்சுமி மற்றும் குபேரனின் மறு அம்சமாக கருதப்படுகிறது.
ஆடிப்பெருக்கு தினமான நாளை மறுநாள் கடைக்குச் சென்று புதியதாக கல் உப்பு வாங்குங்கள். அந்த கல் உப்பை வீட்டில் உள்ள உப்பு ஜாடியில் நிரப்புங்கள். மகாலட்சுமியே தங்கள் வீட்டிற்கு வருவதாக ஐதீகம் ஆகும்.
ஆடிப்பெருக்கு தினத்தில் தங்கம், உப்பு, மஞ்சள் வாங்குவது எந்தளவு சிறப்போ அதே அளவு அடுத்தவர்களுக்கு உதவுவதும் மிகவும் சிறப்பு ஆகும். ஆடிப்பெருக்கு தினத்தில் அடுத்தவர்க்கு தானம் செய்வது மிகமிகச் சிறப்பு ஆகும். ஆடிப்பெருக்கு தினத்தன்று இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்வதால் உங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் மிகுந்த புண்ணியம் உண்டாகும்.