ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என ஆடி மாதங்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்கள் களைகட்டும்.  ஆடி மாதங்களுக்கு அம்மனுக்கு கோயில்களில் கூழ் ஊற்றுவது வழக்கமான ஒன்றாகும். 

ஆடி மாதத்தில் கூழ் ஊற்றுவது ஏன்?

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவதற்கு பல காரணங்கள் உண்டு. மழைப்பொழிய வேண்டும்,  வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வேண்டி அம்மனுக்கு கூழ் படையலிட்டு வணங்குவது வழக்கம். அந்த பழக்கம் தோன்றியதற்கான காரணம் என்ன? என்று புராணங்களில் கூறப்படுகிறது. 

முன்னொரு காலத்தில் ஜமதக்னி என்ற முனிவர் வசித்து வந்தார். சப்த ரிஷிகளில் ஒருவரான இவர் பரசுராமனின் தந்தை ஆவார். அவரது மனைவி ரேணுகாதேவி. ஜமதக்னி வாழ்ந்த காலத்தில் வசிந்த மற்றொரு முனிவர் கார்த்த வீரியார்சுனன். வீரியார்சுனனின் மகன்களுக்கு ஜமதக்னி மீது மிகுந்த பொறாமை இருந்தது. இதனால், ஜமதக்னியை ஏமாற்றி அவரை கொலை செய்தனர். 

வேப்பிலை ஆடை அணிந்த ரேணுகாதேவி:

இதையடுத்து, ஜமதக்னியின் உடலை அக்னி மூட்டி எரித்தனர். தனது கணவர் உயிரிழப்பை தாங்க முடியாத ரேணுகாதேவி தனது கணவரை எரித்த தீயில் உடன்கட்டை ஏறினார். இதை மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்த இந்திரன், வருண பகவானிடம் கூறி மழையைப் பொழிய வைத்து தீயை அணைக்குமாறு தெரிவித்துள்ளார். 

இதனால், தீயை அணைக்க வருணபகவானும் மழையைப் பொழிய வைத்தார். இதனால், மழை பொழிந்து உடன்கட்டை ஏறிய ரேணுகாதேவி பிழைத்தார். ஆனால், ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டது. தீயில் ஆடைகள் இருந்து வெற்றுடலுடன் இருந்த ரேணுகாதேவி அருகில் இருந்த வேப்பிலைகளால் ஆடையை உருவாக்கி அணிந்து கொண்டார். 

அருள் புரிந்த சிவபெருமான்:

பின்னர், தனது பசி தீற அருகில் இருந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டுள்ளார். உடனே அவர்கள் பச்சரிசி, வெல்லம், இளநீர்  உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கூழ் தயாரித்து ரேணுகாதேவிக்கு வழங்கி அவரது பசியைப் போக்கினர். அப்போது, ரேணுகாதேவி முன் தோன்றிய சிவபெருமான் நீ அணிந்த வேப்பிலையே அம்மை நோய் நீங்க சிறந்த மருந்து என்றும், இனி மக்கள் அம்மை நோய்க்கு இந்த வேப்பிலையை பயன்படுத்துவார்கள் என்றும் அருளினார். இவ்வாறு புராணங்களில் கூறப்படுகிறது. 

ரேணுகாதேவியின் புகழைப் போற்றும் வகையிலே ஆடி மாதத்திலே அம்மனுக்கு கோயில்களில் கூழ் ஊற்றப்படுகிறது.