Aadi Pooram 2025 Holiday in Tamilnadu: ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளி, ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் என பல சிறப்பு வாய்ந்த நாட்கள் இந்த நாளில் உள்ளது. இந்த நாட்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்கள் என்றாலும், இந்த ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த நாளும் ஒவ்வொரு மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த நாளாக கொண்டாடப்படுகிறது. 

ஆடிப்பூரத்திற்கு விடுமுறை:

ஆண்டாள் அவதரித்த நாளான ஆடிப்பூரம் வரும் திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். இதையடுத்து, சில மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

யாருக்கு லீவு?

ஆண்டாள் அவதரித்த நாளாக கொண்டாடப்படும் இந்த ஆடிப்பூரத்தில், விருதுநகர் மாவட்டத்தில் ஆடிப்பூரத் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் திருக்கோயில் இந்த நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் புடைசூழ்ந்து காணப்படும். இதையடுத்து, ஆடிப்பூர நன்னாளில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும், புகழ்பெற்ற மேல்மருவத்தூரில் சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் அங்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம். இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டாள் கோயில் தேரோட்டத்திற்காக கல்வி நிலையங்களில் விடுமுறை அளிக்கப்படுவதால், வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கல்வி நிறுவனங்கள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தில் விருதுநகர் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல மாவட்ட மக்கள் பங்கேற்பார்கள் என்பதால் பக்தர்கள் பாதுகாப்பிற்காக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் எப்படி?

தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஆடிப்பூரத்திற்காக விடுமுறை என்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால், விருதுநகர் மற்றும் செங்கல்பட்டு தவிர பிற மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல இயங்க உள்ளது. இருப்பினும், மற்ற மாவட்டங்களிலும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படுவது வழக்கம். 

ஆடிப்பூரம் என்றால் என்ன?

ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரமே ஆடிப்பூரம் ஆகும். நடப்பாண்டிற்கான ஆடிப்பூரம் ஜுலை 28ம் தேதியான வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும், வழிபாடுகளும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நன்னாளில் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தைப் பேறு உள்ளிட்ட நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம் ஆகும்.