Aadi Pooram 2025 Date in Tamil: ஆடி மாதம் என்றாலே மிகுந்த ஆன்மீக மனம் கொண்ட மாதமாக உள்ளது. ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த நாள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நாளை ஆடிப்பூரம் என்று பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.
ஆடிப்பூரம் எப்போது?
இந்த ஆடிப்பூரமான பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளை போற்றும் நாளாக ஆண்டாள் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமியின் அவதாரமாகவே ஆண்டாள் போற்றப்படுகிறார். அந்த ஆண்டாள் ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்திலே அவதரித்ததாக கருதப்படுகிறது.
நடப்பாண்டிற்கான ஆடிப்பூரம் வரும் 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கு மிகவும் உகந்த திங்கட்கிழமையில் ஆடிப்பூரம் வருகிறது. ஜுலை 27ம் தேதி மாலை 6.55 மணிக்கு பூரம் நட்சத்திரம் பிறக்கிறது. ஒரு நாள் சூரிய உதயத்தின்போது என்ன திதி இருக்கிறதோ, அந்த திதியே அந்த நாளில் கணக்கில் கொள்ளப்படும். அதன்படி, 28ம் தேதி சூரிய உதயத்தில்தான் பூரம் நட்சத்திரம் கணக்கில் வருகிறது. இதனால், ஆடிப்பூரம் வரும் 28ம் தேதிதான் கணக்கில் கொள்ளப்படுகிறது.
பூரம் நட்சத்திரம் 27ம் தேதி தொடங்கி 28ம் தேதி இரவு 8 மணி வரை உள்ளது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளான திங்கட்கிழமை மட்டுமின்றி விநாயகருக்கு உகந்த சதுர்த்தி திதியிலும் வருகிறது. சிவன், விநாயகர், ஆண்டாள் ஆகிய மூன்று பேருக்கும் உகந்த நாளாக இந்த நாள் வருகிறது.
என்ன சிறப்புகள்?
திருமாலைப் போற்றிய பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வாரான ஆண்டாள் அவதரித்த நாளாக இந்த நாள் கருதப்படுகிறது. ஆண்டாள் ஜெயந்தியாக கருதப்படும் இதே ஆடிப்பூர நன்னாளில்தான் தேவலோகத்தில் அனைத்து தேவியருக்கும் வளைகாப்பு விழா நடத்தப்பட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
பங்குனி உத்திரத்தில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்ற பிறகு இந்த வளைகாப்பு விழா நடத்தப்பட்டதாகவும் ஒரு ஐதீகம் உள்ளது. மேலும், இதே நாளில்தான் பார்வதி தேவி பூமியில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.
ஆடி மாதமே அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கொண்டாடப்படும் நிலையில், ஆடிப்பூரம் அம்மனுக்கு மிகவும் உகந்த நன்னாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து அம்மன் கோயில்களும் விழாக்கோலம் பூண்டிருக்கும். பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.
அம்மனுக்கு வளைகாப்பு:
இந்த நாளில் அம்மனுக்கு கோயில்களில் வளைகாப்பு நடத்தப்படும். இந்த வளைகாப்பில் சாற்றப்பட்ட வளையல்கள் திருமணமான பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த வளையல்களை அணிவதாலும், வீட்டில் வைத்து வழிபடுவதாலும் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.
மேலும், ஆடிப்பூரம் நன்னாளில் அம்மனுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் வைத்தும், சில இடங்களில் ரூபாய் நோட்டுக்கள் வைத்தும் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த நாளில் அம்மனுக்கு பட்டாடைகளை பக்தர்கள் சாற்றி தங்களது நேர்த்திக்கடனையும் செலுத்துவார்கள். சிறப்பு அர்ச்சனைகளும், பூஜைகளும் நடக்கும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் இந்த நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.