தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனித்துவம் உள்ளது. அந்த வகையில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் என்றாலே தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி வெள்ளி:
ஆடி மாதத்தில் எத்தனையோ நாட்கள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.
ஆடி மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், ஆடி மாதம் 3வது வெள்ளி இன்று கொண்டாடப்படுகிறது. இன்று வரலட்சுமி நோன்பும் சேர்ந்து வருவதால் இந்த வெள்ளி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஆடி மாதத்தின் 4வது வெள்ளியில் பல கோயில்களில் சிறப்பு பூஜைகளும், தீ மீதி திருவிழாவும், அம்மனுக்கு நேர்த்திக்கடன்களும் நிறைவேற்றுவது வழக்கமாக உள்ளது.
பக்தி பரவசத்தில் பக்தர்கள்:
இதற்காக பல கோயில்களிலும் கடந்த சில நாட்களாகவே திருவிழா கோலம் காணப்பட்டது. நேற்று மாலை முதலே கோயில்கள் களைகட்டி காணப்படுகிறது. புகழ்பெற்ற அம்மன் கோயில்களான சமயபுரம் மாரியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், விருதுநகர் மாரியம்மன் கோயில், மேல்மருவத்தூர் கோயில், மேல்மலையமனூர் கோயில், மாங்காடு கோயில் போன்ற கோயில்களில் பக்தர்கள் கூட்டம் இ்ன்று அலைமோதுகிறது.
இன்று வரலட்சுமி நோன்பும் என்பதால் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. இந்த நாளில் திருமணமான பெண்கள் சுமங்கலி பூஜை செய்வது வழக்கம். கணவன்களின் ஆயுள் மற்றும் குடும்பம் மகிழ்ச்சியுடனும், செல்வ செழிப்புடனும் வாழ்வதற்கு இந்த பூஜை செய்யப்படுகிறது.
சிறப்பு ஏற்பாடுகள்:
புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் சிறப்பு பூஜைகளுக்கும், வழிபாட்டிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்வதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை முதலே கோயில்களில் வழிபாடுகளும், பூஜைகளும் நடந்தாலும் மாலை முதல் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும், பொங்கலிட்டு வழிபடுவதும் நடக்கும். இன்று வரலட்சுமி நோன்பு என்பதால் திருமணமான பெண்களுடன் திருமணம் ஆகாத பெண்களும் தங்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு வரலட்சுமி விரதம் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.