ஆடித்திருவிழா சிறப்பு குறித்து கூறும்போது, அது ஆன்மீகத்திலும், சமூகத்திலும், இயற்கையிலும் பல பரிமாணங்களில் சிறப்புடையதாகும். இந்த விழா தமிழ்மன்றத்திற்கும், கிழக்குத்தமிழர் பாரம்பரியத்திற்கும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஆடி அமாவாசை, ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆண்டாள் திருவிழா போன்றவை இந்த மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பெண்கள் அம்மனுக்கு (மாரியம்மன், காளி, கங்கா போன்ற தேவிகளை) விரதமிட்டு பூஜை செய்கிறார்கள். இது பெண்கள் ஆசீர்வாதமும், குடும்ப நலனும் வேண்டும் வழிபாடாகும். ஆடியில் தமிழகத்தில் வானிலைக் கடவுள் “வருணன்” அருளால் பெரும்படியாக மழை பெய்யும். இந்த பருவக்காலத்தில் நதிகள், குளங்கள், வயல்கள் எல்லாம் நீரால் நிரம்பும். இதனைக் கொண்டாடுவதற்காகவே ஆடிப்பெருக்கு எனும் விழா கொண்டாடப்படுகிறது. இயற்கை வளம் பெருகும் அறுவடையின் தொடக்கநிலையை இது குறிக்கிறது.
ஆடித் திருவிழாவின்போது மாட வீடுகளில் கொலு, பாவை அமைத்தல், ஓவியக்கலை, நாடகங்கள், பாடல்கள், கோலங்கள் போன்ற பாரம்பரியக் கலாச்சாரங்கள் மீண்டும் உயிர் பெறுகின்றன. ஆடிப்பெருக்கு திருவிழாக்கள் நடைபெறுவதில் கிராமப்புறங்களில் தேர், ஆட்டமேளங்கள், கும்மி, கொலாட்டம் போன்ற மக்கள் கலைவிழாக்களும் நடக்கின்றன. ஆடிப்பெருக்கில் இது போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், நத்தம் அருகே ஆடித்திருவிழாவில் பார்க்கவே புல்லரிக்கும் வகையில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத விழா நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி யூனியன் கம்பிளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆண்டியபட்டியில் குரும்பாகுல அருள்மிகு ஶ்ரீ மகாலெட்சுமி, ஶ்ரீ கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் இத்திருவிழா நேற்று சாமி சாட்டுதலுடன் துவங்கியது. திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக காப்பு கட்டி விரதத்தை துவங்கினர். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெறும் இக்கோவில் திருவிழாவின் போது ஆண்கள், பெண்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகாலட்சுமி அம்மன் முன் கோரிக்கை வைத்து வேண்டுதல் நிறைவேறினால் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டுதல் வைப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் நடைபெற்று வரும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேர்த்திக்கடன் வைத்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நேர்த்திக்கடன் வைத்த 30 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் முன்பு தரையில் வரிசையாக அமர வைக்கப்பட்டு ”கோவிந்தா கோவிந்தா” என கோஷம் முழங்க பக்தர்கள் தலையில் பூசாரி தேங்காய் உடைத்தார். இதில் பழனி,தேனி, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கம்பிளியம்பட்டி, ஆண்டியபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.