தொடர் விடுமுறை காரணமாக குடும்ப குடும்பமாக குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏந்தி சாமி தரிசனம் செய்ய குவிந்த பொதுமக்கள்..


 

ஆடி மாதம் என்றாலே அம்மன் ( Aadi Festival 2023 ) 

 

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவிலில் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் திருவிழாக்கள் களைகட்டுவது வழக்கம். குறிப்பாக, ஆடி மாதத்தை பொறுத்தவரை சிறு தெய்வங்கள் வழிபாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ஆடி மாதம், நிறைவடைய உள்ள நிலையில்,  பல்வேறு கோவில்களில் ஆடிப்பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

 



காஞ்சிபுரம்  ஸ்ரீ தும்பவனத்தம்மன் கோவில் ( Thumbavanam Mariamman Temple )

 

காஞ்சிபுரம் அருகே தும்பவனம் பகுதியில் உள்ள கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ தும்பவனத்தம்மன் கோவிலில் ஆடி மாதம் முழுவதும் குலதெய்வ வழிபாடு செய்ய பொங்கல் வைத்தும் மாவிளக்கு ஏந்தி தும்பவனத்தம்மன் அம்மனை வழிபாடு செய்வது வழக்கம். ஆடி மாதம் துவங்கியதில் இருந்தே ஆயிரக்கணக்கான, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஆடி மாதம் முழுவதும், ஸ்ரீதும்பவனத்தம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தை பங்கெடுக்கும் காட்சி அளித்து வருகிறார்.



 

தொடர் விடுமுறை எதிரொலி

 

அந்தவகையில் இன்று தொடர் விடுமுறை மற்றும் ஆடி மாதம் நிறைவடைய உள்ள நிலையில், பல்வேறு மாவட்டத்தில் இருந்து காலை முதலே குடும்பம் குடும்பமாக குலதெய்வ வழிபாடு செய்ய ஶ்ரீதும்பவனத்தம்மன் கோவிலுக்கு வருகை தந்து கோவிலில் உட்பிரகாரத்தில் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏந்தி  வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

 

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்

 

ஆடி மாதம் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் அதிக அளவில் வருவதை ஒட்டி ஸ்ரீ தும்பவனத்தம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனை நடைபெற்று பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வளையல் மாலை அணிவித்து, சந்தன காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.



இதனை காண பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்காக, சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. இதுபோன்று காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆடி மாத திருவிழாக்களும் நடைபெற்று வருகிறது.