திருவண்ணாமலை நகர பகுதியின் மையபகுதியில் அமைந்துள்ள அய்யங்குளம் குளக்கரை புனரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அய்யங்குளக்கரையில் 1896-ம் ஆண்டு ரமண மகரிஷி முதன் முதலில் திருவண்ணாமலைக்கு வந்த போது இந்த குளக்கரையில் நீராடினார் என ஆன்மீக பக்தர்கள் கருதுகின்ற குளம் இந்து அய்யங்குளம்.
கார்த்திகை தீப திருவிழா:
இது மட்டுமின்றி கார்த்திகை தீப திருவிழா முடிந்து மூன்று நாட்கள் இந்த அய்யங்குளத்தில் விநாயகர், முருகர் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளி தெப்பல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த அய்யங்குளமானது மூன்று ஏக்கர் பரப்பளவில் 360 அடி நீளமும், 360 அடி அகலமும், 32 அடி ஆழமும் கொண்டுள்ள அலங்காரப் படிகட்டுகளுடன் கட்டப்பட்ட குளக்கரையாகும். இந்த ஐயங்குளம் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது.
அய்யங்குளக்கரை சீரமைத்து செப்பனிடப்படும்
குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் கார்த்திகை தீப திருவிழா முடிந்து அய்யங்குளத்தில் தீர்த்த வாரி நடைபெற்ற பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு சிவாச்சாரியார்கள் பலியாகினர். இதனைத் தொடர்ந்து அப்போதைய திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அய்யங்குளக்கரை சீரமைத்து செப்பனிடப்படும் என வாக்குறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அய்யங்குளக்கரை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. அய்யங்குளம் சீரமைக்கும் பணிகளை தமிழக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றது எனவும், குளக்கரையில் உள்ள படிக்கட்டுகள், கைப்பிடி சுவர்கள், குளத்திற்கு வரும் நீர்வரத்து வழிப்பாதை உள்ளிட்ட அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
செய்தியாளர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேட்டி; ஆன்மீக நகரமான திருவண்ணாமலையின் மையப்பகுதியில் அய்யங்குளக்கரை பல ஆண்டுகளாக சீர் செய்யாமல் புதர்கள் மண்டி காணப்படுவதுடன் சேரும் சகதியும் அதிகமாக உள்ளதால் தெப்பல் திருவிழாவை நடத்த சிரமமாக உள்ளதாக ஆன்மீக பக்தர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தற்போது அய்யங்குளம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இது மட்டுமின்றி அய்யங்குளத்தின் மையப் பகுதியில் உள்ள மண்டபத்தில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அண்ணாமலையார் மலையை நோக்கியவாறு நந்தி சிலை நிறுவப்படும் எனவும், ஐயங்குளக்கரையின் நான்கு புறங்களிலும் உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்தி பாதுகாக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இந்த பணியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பாதுகாவலர்கள் ஈடுபட்டு வருவதாகவும், விரைவாக இந்த பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்
கிரிவலப் பாதையில் அசைவ உணவகங்கள் அகற்றப்பட வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்திற்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உணவு சாப்பிடுவோரின் தனிப்பட்ட கருத்திற்கு நானோ அல்லது அரசோ தலையிட முடியாது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பமே அவர்களுக்கு ஏற்ப உணவு வகைகளை சாப்பிட்டு வருவது.
ஆகையால் இந்த உணவைத்தான் சாப்பிட வேண்டும் இந்த உணவைத்தான் விற்க வேண்டும் என்று என்னாலோ தமிழக அரசாலோ தெரிவிக்க முடியாது. உணவு சாப்பிடுபவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதை கட்டுப்படுத்த இயலாது. குறிப்பாக மாத மாதம் வரும் பௌர்ணமி தினத்தின் பொழுது கிரிவலப் பாதையில் உள்ள உணவகங்களில் அசைவ உணவு சமைக்கப்படுவதில்லை.
நீட் பயிற்சி:
நீட் தேர்வு ரத்து விவகாரம் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்திருக்கு பதில் அளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கிராமப்புறங்களில் இருந்து வரும் ஏழை எளிய மாணவர்கள் நன்றாக பயின்று பல்வேறு பணிகளுக்கு செல்ல வேண்டும் என அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தான் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 12 ஆண்டுகள் அரசு பள்ளியில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக மருத்துவ படிப்பிற்குள் நுழைய முடியாதவாறு மத்திய அரசு நீட் தேர்வு என்ற ஒரு விவகாரத்தை வைத்துள்ளதாகவும், குறிப்பாக 12 ஆண்டுகள் அரசு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற ஒரு மாணவர் மூன்று மாதம் தனியாரிடம் பயின்று நீட் தேர்வு எழுதினால் எவ்வாறு தேர்ச்சி அடைய முடியும் எனவும், ஆகையால் தமிழக அரசும் தமிழக முதல்வரும் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்திற்கு நீட் தேர்வை ரத்து செய்வதில் தயக்கம் காட்ட மாட்டார்கள் எனவும், கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்திற்காக திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.