அமாவாசை தினம் என்றாலே மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். அதுவும் ஆடி அமாவாசை தினம் என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நடப்பாண்டிற்கான ஆடி மாதம் நாளை பிறக்க உள்ளது. இந்த ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வர உள்ளது.


ஆடி அமாவாசை:


ஆடி பிறக்கும் முதல் நாளான நாளையே அமாவாசை பிறக்க உள்ளது. நடப்பாண்டில் நாளையும், ஆடி முடிவடையும் ஆகஸ்ட் 17-ந் தேதிக்கு முதல் நாளான ஆகஸ்ட் 16-ந் தேதியும் அமாவாசை தினம் ஆகும். வழக்கமாக, ஆடி அமாவாசை தினம் என்றால் அன்றைய தினம் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம் ஆகும். வழக்கமாக ஆடியில் 2 அமாவாசை வந்தால் இரண்டாவது அமாவாசை தினத்தில் தர்ப்பணம் அளிப்பதே சிறப்பு ஆகும். ஆனாலும், சிலர் முதல் அமாவாசையிலும் தர்ப்பணம் அளிப்பார்கள்.


தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஆடி அமாவாசை தினம் என்றால் ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கத்தில் மக்கள் குவிந்து திதி அளிப்பது வழக்கம் ஆகும். இந்த இடங்கள் தவிர தமிழ்நாட்டில் வேறு சில இடங்களிலும் தர்ப்பணம் அளிக்கலாம்.


எங்கெல்லாம் தர்ப்பணம் அளிக்கலாம்?


முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோயில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில், வரமூர்த்தீஸ்வரர் கோயில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வீரராகவர் கோயில், திருவாரூரில் உள்ள குருவிராமேஸ்வரம் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சொறிமுத்து அய்யனார் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ஆகிய ஸ்தலங்களிலும் தர்ப்பணம் அளிக்க பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிவது வழக்கம்.


புகழ்பெற்ற ராமேஸ்வரத்திலும், ஸ்ரீரங்கத்திலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவது போல, ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள திருப்புல்லாணி கோயிலுக்கு சென்றும் தர்ப்பணம் அளிக்கலாம். மேலும், மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் எனும் ஊருக்கு அருகில் திலதர்ப்பணபுரி கோயில் அமைந்துள்ளது. அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிப்பது மிகுந்த புண்ணியத்தை அளிக்க வல்லது.


ஆடி அமாவாசை தினத்தில் மேற்கூறிய கோயில்களுக்கு சென்று அங்குள்ள குளங்களிலோ அல்லது அருகில் உள்ள ஆறுகளிலோ, கடலிலோ நீராடி முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதியை முறைப்படி செய்தால் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைவதுடன் நாம் பல புண்ணியங்களை பெறலாம் என்பது ஐதீகம்.


மேலும் படிக்க: Aadi Amavasai Thaligai: ஆடி அமாவாசை பூஜைக்கு செய்யவேண்டிய தளிகை உணவு வகைகள் என்ன?


மேலும் படிக்க: Pradosham: சிறப்பான சனி பிரதோஷம் : சிவபெருமான் வழிபாடு இன்று ஏன் முக்கியம் தெரியுமா?