Aadi Amavasai 2025 Wishes in Tamil: ஆடி மாதத்தில் வரும் அனைத்து நாட்களும் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஆடி அமாவாசை நாள் ஆடி மாதத்திலே மிகவும் மகத்துவமான நாளாக கருதப்படுகிறது.
இந்த நன்னாளில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது வழக்கம் ஆகும். இந்த நாளில் தர்ப்பணம் அளிப்பதால் தங்களது மூதாதையர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை அதிகாலை 3.06 மணிக்கு ஆடி அமாவாசை திதி பிறக்கிறது. நாளை நள்ளிரவு 1.04 மணி வரை அமாவாசை திதி தொடர்கிறது.
நாளை ஆடி அமாவாசை வருகிறது. சந்திரனும், சூரியனும் ஒரே ராசியில் வருவதே அமாவாசை ஆகும். ஆடி மாதத்தில் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமை நாளில் இந்த அமாவாசை வருகிறது. இன்று வழிபடுவதால் முன்னோர்களின் ஆசிர்வாதத்துடன் குரு பகவானின் ஆசிர்வாதமும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி அமாவாசை நாளில் தர்ப்பணம் என்பது எமகண்டம் மற்றும் ராகு காலத்தில் தரக்கூடாது. நாளை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை எமகண்டம் ஆகும். மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை ராகுகாலம் ஆகும். இந்த நேரம் தவிர்த்து காலையில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும்.
தர்ப்பணம் கொடுப்பது மட்டுமின்றி முன்னோர்களை வணங்கி வீடுகளில் படையலிட்டு வணங்குவதும் பக்தர்களின் வழக்கம் ஆகும். இதனால், வீடுகளில் படையலிட்டு வணங்குபவர்கள் வரும் ராகுகாலமான 1.30 மணிக்கு முன்பே படையல் இட்டு வணங்குவது சிறப்பு ஆகும்.
பாெதுவாக, தர்ப்பணமானது புண்ணிய நதிகளின் கரைகளில் கொடுப்பதே வழக்கம் ஆகும். இதனால், ராமேஸ்வரம், காவிரி நதிக்கரை உள்ளிட்ட பல இடங்களில் நாளை லட்சக்கணக்கானோர் திதி அளிப்பார்கள்.
பக்தர்களின் வசதிக்காக ராமேஸ்வரத்திற்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், கோயில்களிலும் பக்தர்கள் குவிவார்கள் என்பதால் சிறப்பு பூஜைக்கும், வழிபாட்டிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.