Aadi Amavasai 2025 Date and Time: தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாள் சிறப்பு வாய்ந்த நாளாக இருந்தாலும் ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். 

ஆடி அமாவாசை எப்போது?

நடப்பாண்டிற்கான ஆடி அமாவாசை வரும் 24ம் தேதி அதாவது நாளை மறுநாள் வருகிறது. அதாவது, நாளை மறுநாள் அதிகாலை 3.06 மணிக்கு அமாவாசை திதி பிறக்கிறது. அந்த அமாவாசை ஜுலை 25ம் தேதி அதிகாலை அதாவது, நாளை மறுநாள் நள்ளிரவு 1.04 மணி வரை வருகிறது. 

ஆடி அமாவாசை நாளில் பொதுவாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் ஆகும். தர்ப்பணம் பொதுவாக எமகண்டம் மற்றும் ராகு கால நேரத்தில் கொடுக்கக்கூடாது. நாளை மறுநாள் காலை 6 முதல் 7.30 மணி வரை எமகண்டம் வருகிறது. மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை ராகுகாலம் வருகிறது. 

இதனால், நாளை மறுநாள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க விரும்புபவர்கள் எமகண்டம் மற்றும் ராகுகாலம் தவிர்த்த மற்ற நேரங்களில் கொடுப்பது சிறப்பு ஆகும். காலை நேரத்திலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதே சிறப்பானது ஆகும். இதனால், எமகண்டம் முடிந்த பிறகு காலை 7.30 மணிக்கு பிறகு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும். 

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பிறகு, படையலிட்டு வழிபடுவது வழக்கம். அவ்வாறு முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட நினைப்பவர்கள் மதியம் 1.20 மணிக்கு முன்பாக படையலிட வேண்டும். அதாவது, எமகண்டத்திற்கு முன்பே படையலிட்டு வழிபடுவது சிறப்பாகும். 

நடப்பாண்டில் என்ன சிறப்பு?

ஆடி அமாவாசை என்றாலே சிறப்பு வாய்ந்தது ஆகும். நடப்பாண்டிற்கான ஆடி அமாவாசை வியாழக்கிழமையுடன் இணைந்த புனர்பூசம் நட்சத்திரத்தில் வருகிறது. குரு பகவானே புனர்பூசம் நட்சத்திரத்திற்கு அதிபதி ஆவார். குரு பகவானுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை.  தனக்கு உகந்த நட்சத்திரமும், நாளும் இணைந்து வரும் நாளில் ஆடி அமாவாசை வருவது தனிச்சிறப்பு ஆகும். இந்த நாளில் குரு பகவானை வணங்குவதால் ஏராளமான மங்கல காரியங்கள் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புண்ணிய நதிகள்:

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு மிகவும் தர்ப்பணம் தருவதற்கு ஏற்ற நாள் என்பதால், புண்ணிய நதிகளின் கரைகளில் தர்ப்பணம் தருவதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இதன்படி, புனித தலமான ராமேஸ்வரம் கடற்கரையில் நாளை மறுநாள் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் குவிய உள்ளனர். மேலும், காவிரி நதியிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த நதிகள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் மற்ற நதிக்கரையிலும் தர்ப்பணம் கொடுப்பதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். 

தர்ப்பணம்  தருவதற்காக ராமேஸ்வரம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.