தமிழ் மாதங்களில் வரும் ஒவ்வொரு தினங்களும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக, தமிழ் மாதங்களில் வரும் அமாவாசை தினம் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். அதிலும் ஆடி மாதம் வரும் அமாவாசை தினம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க மிகவும் உகந்த நாள் ஆகும்.


தர்ப்பணம்:


நடப்பாண்டிற்கான ஆடி மாதத்தில் 2 அமாவாசைகள் வர உள்ளது. இந்த நிலையில், ஆடி அமாவாசையில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதற்காக கோயில்களின் குளங்களிலும், ஆற்றங்கரை ஓரங்களிலும், கடற்கரைகளிலும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் குவிவது வழக்கம் ஆகும்.


அமாவாசை நாளில் திதி அளிப்பதால் நமது முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடையும். நம் முன்னோர்களுக்கு நாம் அமாவாசை, புண்ய கால தர்ப்பணம், வருட ஸ்ரார்தம், மகாளய பட்சம் ஆகிய 96 நாட்கள் நாம் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஆனால், தற்போதைய வாழ்க்கை சூழலில் 96 நாட்கள் தர்ப்பணம் செய்வது இயலாது என்பதால், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய நாட்களில் நம் முன்னோர்களுக்கு திதி அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளோம்.


தர்ப்பணம் அளிப்பது எப்படி?



  • அமாவாசை நாளில் ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

  • தர்ப்பணம் அளிப்பதற்கு ராகு காலம், எமகண்டம் ஆகியவற்றை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

  • முன்னோர்களுக்கு திதி அளிக்கும்போது கோத்திரம், குலதெய்வம், தந்தை வழி மற்றும் தாய்வழி என மூன்று தலைமுறையினரின் பெயர்களை சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

  • தர்ப்பணம் செய்யும் தினத்தில் வீட்டில் உள்ள முன்னோர்களின் படத்திற்கு துளசி மாலையோ அல்லது துளசி இலையோ அணிவிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு விஷ்ணுவின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

  • முன்னோர்களின் படத்தை வடகிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.

  • நாம் தர்ப்பணம் வழங்கும் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும்.

  • முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம் மற்றும் பழ வகைகளை தலை வாழையிட்டு படைக்க வேண்டும்.

  • முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும்போது வீட்டில் தெய்வ காரியங்கள் சம்பந்தமான பூஜைகளை செய்யக்கூடாது.

  • தர்ப்பணம் செய்து முடித்த பிறகே தினசரி செய்யும் பூஜைகளை செய்ய வேண்டும்.

  • இயற்கையான முறையில் மரணம் அடைந்தவர்களை தவிர கொலை, தற்கொலை, விபத்து மற்றும் அகால மரணங்கள் மூலம் உயிர் நீத்தவர்களுக்கு முறையாக கர்ம காரியங்கள் செய்ய வேண்டியது அவசியம்.

  • அவ்வாறு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது மூலம் அவர்களது ஆன்மா சாந்தியடையும்.


முன்னோர்கள் ஆசிர்வாதம்:


முன்னோர்களுக்கு நாம் முறையாக தர்ப்பணம் அளிப்பது மூலமாக நமது குடும்பத்தில் நீடித்து வந்த சிக்கல்கள், பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மன உளைச்சல் நீங்கி முன்னோர்களின் ஆசிர்வாதம் நமக்கு கிடைக்கும். தர்ப்பணம் செய்வதுடன் ஏழைகள், முடியாதவர்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு ஆகும். அன்னதானம் செய்ய இயலாதவர்கள் தண்ணீர் கூட தானமாக வழங்கலாம். ஆடி அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடைவதுடன் அவர்களது பரிபூர்ண ஆசிர்வாதமும் நமக்கு கிடைக்கும்.


மேலும் படிக்க: Aadi Amavasai 2023: இந்த ஆடியில் 2 அமாவாசை.. எந்த நாளில் முன்னோர்களுக்கு திதி அளிப்பது? இதோ பாருங்க..!


மேலும் படிக்க: திருமணத்தடை நீங்க ஆலயத்தை சுற்றி வந்த பக்தர்கள்; சேத்திரபாலபுரத்தில் கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு