சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னப்பம்பட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர் சின்னப்பம்பட்டி பகுதியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”அதிமுக என்பது ஒன்றுதான். ஜெயலலிதா இருந்தபோது ஒரு கோடியே 50 லட்சம் பேர் தொண்டர்கள் இருந்தனர். இப்போது அதிமுகவிற்கு ஒரு கோடியே 90 லட்சம் பேர் உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுகவை ஸ்டாலினால் அசைக்கவே முடியாது. திமுகவிற்கு ஓபிஎஸ் பி டீமாக செயல்பட்டார். ஆனால் அதிமுக தான் தமிழகத்தில் அதிகம் நாள் ஆட்சி செய்த கட்சி, 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்துள்ளது. விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் ஆனதிலிருந்து திமுகவிற்கு சனி பிடித்துவிட்டது. அந்த அளவிற்கு ராசியான மனிதர் உதயநிதி ஸ்டாலின். நெஞ்சை பிடித்துக் கொண்டு ஒவ்வொருவராக சிறைக்கு செல்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் எப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் ஆனாரோ அப்போது திமுகவிற்கு கண்டம் பிடித்துவிட்டது. ஒவ்வொரு அமைச்சர்களாக உள்ளே சென்று கொண்டிருக்கின்றனர். ஆர்.எஸ்.பாரதி என் மீது போட்ட வழக்கை வாபஸ் வாங்குவதாக கூறினார். உண்மை வெளியே தெரியவேண்டும் என்பதற்காக நான் மறுத்துவிட்டேன். என் மீது பொய் வழக்கு போட்டதை நீதிமன்றம் கண்டித்து உள்ளது. நீதிமன்றம் மூலமாக அவரது முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது. அதிமுக ஆட்சியில் நான் நினைத்திருந்தால் ஸ்டாலின் மீது எத்தனை வழக்கு வேண்டுமானால் போட்டிருக்க முடியும், நான் மக்களுக்காக தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உருவானது. சட்டமன்றத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் சொல்லவில்லை, தெரிந்தால் தானே சொல்லமுடியும், முதலமைச்சர் இடம் தான் காவல்துறை உள்ளது. காவல்துறை மானிய கோரிக்கை புத்தகத்தில் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி கல்லூரிக்கு அருகில் 2138 பேர் கஞ்சா விற்பதாக கண்டறிந்து 148 பேர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தது. மீதம் உள்ளவர்கள் திமுகவினர் என்பதால் கைது செய்யப்படவில்லை. இதுவரை பதில் சொல்லவே இல்லை. நடப்பாண்டு மானிய கோரிக்கையில் போதைப்பொருள் என்ற விவரமே இல்லை” என்று பேசினார்.



தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் 6000 மதுபான கடைகள் உள்ளது. அதில் 3500 கடையில் அனுமதி இல்லாமல் பார் வைக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் திமுகவினர் வசம் உள்ளது. இந்த பார்களில் மது ஆலைகளிலிருந்து வரி செலுத்தப்படாமல் நேரடியாக மது பாட்டில்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு 10,000 கோடி கொள்ளை அடித்துள்ளனர். இப்போது நெஞ்சுவலி என்று சொல்கின்றனர். இப்படி கொள்ளையடித்தது போதாமல் கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. வருடத்திற்கு இதன்மூலம் 3600 கோடி கொள்ளை அடிக்கப்படுகிறது. வருடத்திற்கு ஒரு நபரிடம் இருந்து 3600 ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. கொள்ளையடிப்பது தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் விமர்சனம் செய்தார். இரண்டு ஆண்டு காலம் திமுக அரசு செய்த சாதனை 30 ஆயிரம் கோடி கொள்ளை அடித்தது தான். அதை நிதியமைச்சரே சொல்லி இருக்கிறார். அதை அவரும் மறுக்கவில்லை. ஆனால் அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்து தரவில்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். திமுக ஆட்சி நிலைக்கப் போவதில்லை. நாடாளுமன்ற தேர்தல் வரும்போது சட்டமன்ற தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால்தான் ஸ்டாலின் பத்து நாட்களுக்கு முன்பு ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் போல் பேசினார். பொன்முடி 100 கோடி அந்நிய செலாவணியில் சிக்கி உள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஸ்டாலின் வழக்கு தொடுத்துள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் உங்களால் தாங்க முடியாது. ஏற்கனவே நான் மக்களிடம் நற்பெயர் வாங்கிவிட்டேன். திமுக கொள்ளை அடித்த 30 ஆயிரம் கோடி எங்கு சுற்றிக் கொண்டிருக்கிறது என்று மத்திய அரசு கண்காணித்து வருகிறது. ஊழல்செய்து சிறை சென்ற அமைச்சருக்கு ஏகப்பட்ட சலுகை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆலடி அருணா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். அனைத்து கட்சியிலுமே இது போன்ற நிலை வரும் போது அந்த நபர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இப்போது இலாகா இல்லாத அமைச்சர் என்று புதிதாக ஒன்றை உருவாக்குகின்றனர். இருக்கின்ற அமைச்சர்களில் அதிகமாக வசூல் செய்து கொடுத்தவர் செந்தில்பாலாஜி அதனால்தான் அவரை அனைவரும் ஓடோடி சென்று பார்க்கின்றனர். அவர் வாய்திறந்தால் ஆட்சி கவிழ்ந்துவிடும் அதனால் அச்சப்பட்டு அவரை சென்று பார்க்கின்றனர். 65 ஆண்டுகாலம் திமுகவிற்காக உழைத்தவர் பொதுசெயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு சிலர் தான் சென்று பார்த்தனர். பொன்முடியை அழைத்துச் சென்றனர், அவரை ஸ்டாலின் போய் பார்க்கவில்லை, அவர்தான் ஸ்டாலினை சென்று பார்த்தார். ஒரே ஐந்தாண்டுகளில் இரண்டு கட்சியில் நின்று போட்டியிட்டவர் செந்தில் பாலாஜி, மக்களை ஏமாற்றுவதிலும் ஊழல் செய்தவர்களுக்கும் டாக்டர் பட்டம் தர வேண்டும் என்றால் செந்தில் பாலாஜிக்கு தரலாம்” என்றும் கிண்டலடித்தார்.



 


மேலும், “திமுகவில் உழைப்பவருக்கு இடமில்லை, அதிமுகவில் சாதாரண ஒரு அடிப்படை விவசாயி கூட ஒரு கட்சிக்கு பொதுசெயலாளர் ஆகலாம், திமுகவில் யாராவது முதலமைச்சர் என்று தன்னை சொல்லிக்கொண்டால் அதோடு அவர் காலியாகிவிடுவார். பாரத பிரதமர் அருகில் நான் இருந்ததை பார்த்து அடிமை என்று கூறுகின்றனர். உடனடியாக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தபோது காவிரி உரிமைக்காக கொடுக்கப்பட்ட வழக்கு திறம்பட வாதாடி 22 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்கி காவிரி உரிமையை பெற்றோம். ஆனால் ஜூன் 12க்கு பிறகு தற்போது வரை காவிரியில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் விடவில்லை. கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் தண்ணீர் தர முடியாது என்று கூறுகிறார். ஆனால் அவருடன் இணைந்து ஸ்டாலின் கூட்டணி பேசுகிறார். மேகதாது அணை கட்டுவதாக கர்நாடகா கூறுகின்றது. பெங்களூர் சென்ற ஸ்டாலின் இது பற்றி ஒரு வார்த்தை கூட அவர்களிடம் பேசவில்லை, தமிழகத்தில் குறுவை சாகுபடி இல்லை என்றால் அரிசி விலை உயர்ந்துவிடும். ஏற்கனவே விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைபொருள், போதையில் காவல்துறையினரையே அடிக்கின்றனர். காவல்துறையினருக்கு இந்த நிலைமை என்றால் நாட்டு மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்க முடியும், ஆனால் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று கூறுகின்றனர். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் புதிய தொழிற்சாலைகள் வரும் பொருளாதாரம் மேம்பாடு அடையும் . ஆனால் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருள், கஞ்சா, குட்கா புழக்கம். எங்கு பார்த்தாலும் முதியோர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


துப்பாக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று டிஜிபி சொல்லுகிறார். சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது, இதுபெரிய அவமானம். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கிற்கு முதலிடம் விருது பெற்றோம். இப்போது திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் புலம்புகிறார். ஒவ்வொரு நாளும் அச்சத்தில் கண்விழிப்பதாக கூறுகிறார். இவர்களால் எப்படி மக்களை காப்பாற்ற முடியும். அதிமுக ஆட்சியின்போது கொடநாட்டில் கொலை கொள்ளை நடந்தது. அதில் குற்றவாளிகளை கண்டுபிடித்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஐஜி தலைமையில் விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் சிபிசிஐடிக்கு செல்கின்றனர். குற்றவாளியை கண்டுபிடித்தது அதிமுக அரசு அவர்களுக்கு ஜாமீன் எடுத்து கொடுத்தது திமுக வழக்கறிஞர். அந்த குற்றவாளிகள் கொடும் குற்றம் புரிந்தவர்கள் என்றார். திமுக ஆட்சியில் நடந்த கொலைகள் குறித்த விபரம் தன் வசம் உள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அவை அனைத்தும் தோண்டி எடுக்கப்படும். எட்டு லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட டிரான்ஸ்பார்மர் 13 லட்சத்திற்கு வாங்கி உள்ளனர். குறுக்கு வழியில் வந்த ஸ்டாலினுக்கு இவ்வளவு தில் என்றால், உழைத்து வந்த எனக்கு எவ்வளவு தில் இருக்கும்” எனக் கூறினார்.