Gukesh Dommaraju: வரலாறு படைத்த குகேஷ் - வெற்றி பயணம் பற்றி தெரியுமா?
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடரில் வெற்றிபெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் 18 வயது இளம்வீரர் குகேஷ் தொம்மராஜு. உலகின் இளம் செஸ் சாம்பியன் என்ற சாதனையையும் தட்டிச்சென்றுள்ளார் குகேஷ். யார் இந்த இளம் வீரர? 7 வயது சிறுவனின் ஆசை 18 வயது இளைஞனின் சாதனையாக உருமாறிய பயணம் குறித்து தெரிந்துகொள்வோம்.
கடந்த 2006 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார் குகேஷ் தொம்மராஜு..அப்பா ரஜினிகாந்த் டாக்டர் அம்மா பத்மா மைக்ரோபயாலஜிஸ்ட். 7 வயதிலேயே செஸ் மீது ஆர்வம் கொண்ட மகனை கோச்சிங் க்ளாஸ் அனுப்பி ஊக்குவித்துள்ளனர் இந்த ப்ரௌட் பேரண்ட்ஸ்.
2015-இல் நடந்த பள்ளிகளுக்கான ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றார் குகேஷ். அந்த வெற்றி அவரது கனவை நோக்கி பயணிக்க பெரும் உத்வேகத்தை அளித்தது. அடுத்ததாக 2018-ல் நடந்த 12 வயதுக்குப்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்று குகேஷ், உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டித்தூக்கினார்.
2018-இல் நடந்த ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தனிநபர் மற்றும் குழு என மொத்தம் 5 தங்கப் பதக்கங்களை குவித்தார். 2017-ல் நடந்த 34வது Cappelle-la-Grande Open செஸ் தொடரில், இளம் வயதில் சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்ற மூன்றாவது நபர் என்ற சாதனையையும் படைத்தார்.
இப்படி வெற்றி மீது வெற்றிகளை குவித்து வந்த குகேஷ்.. 17 வயதில் செஸ் ரேங்கிங்கில் 2750 புள்ளிகளை பெற்றார். சில நாட்களிலேயே 37 ஆண்டுகளாக சாம்பியனாக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை ஓவர்டேக் செய்து அசுர சாதனை படைத்தார்.