CWC 2023 : இந்திய மண்ணில் களமிறங்கும் 10 நாடுகள்.. ஒவ்வொருவரின் பலம் என்ன பலவீனம் என்ன?
13வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி அன்று தொடங்க இருக்கிறது. முதல் முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா தனித்து நடத்துகிறது.
13வது கிரிக்கெட் உலகக் கோப்பையில் மொத்தம் பத்து அணிகள் கலந்து கொள்கின்றன. இதற்கிடையில் 15 பேர் கொண்ட வீரர் பட்டியலை அந்தந்த நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருக்கின்றன.
உலக கோப்பையில் பங்குபெறும் பத்து அணிகளும் சம பலத்துடன் இந்திய ஆடுகளங்களில் அதிரடி காட்ட இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா அணி பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சம பலத்துடன் களத்தில் இறங்குகிறது.
அதேபோல் இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பவுலிங் சம பலத்துடன் இருந்தாலும் அணியின் ஆல்ரண்டர்களே வெற்றியை தீர்மானிக்க அதிக வாய்ப்புள்ளது . அதிவேக பந்துவீச்சாளர்களை கொண்டு களமிறங்கும் பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங்கில் சுதப்பல் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் அணியை போன்று பங்களாதேஷ் பௌலிங்கில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு நாள் போட்டிகளில் அதிரடி காட்டி வந்த இலங்கை அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.
இருப்பினும் இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர்களின் சுழல் உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடும் பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கும் என்பதில் ஆட்சேபனை இல்லை. ஓரளவுக்கு பேட்டிங்கும் மிதமான பெளலிங் செய்யும் வீரர்களை வைத்துக்கொண்டு உலக கோப்பையில் விளையாட இருக்கும் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் சமபலத்துடன் களத்திற்கு வருகிறது. உலக கோப்பையில் கணிசமான வெற்றிகளை பெற்றிருக்கும் நெதர்லாந்து அணி இம்முறை உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்த தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்திய மைதானங்களின் ஆடுகளங்கள் இந்திய அணிக்கு பரீட்சயமானதாக இருப்பதால் இந்திய அணிக்கு கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.