Shaahi Paneer Paratha : சூப்பரான நார்த் இண்டியன் டின்னர் தயார்..ஷாஹி பன்னீர் பராத்தா ரெசிபி இதோ!
வட இந்திய உணவு பிரியரா நீங்கள்..? இனி அவற்றை சாப்பிட தாபாக்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதோ இந்த ஷாகி பன்னீர் பராத்தா ரெசிபியை வீட்டில் செய்து அசத்துங்கள்!
தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - 2 கப், ஓமம் - 1/2 தேக்கரண்டி, உருளைக்கிழங்கு - 3 நறுக்கியது, கேரட் - 1 நறுக்கியது, பச்சை பட்டாணி, தண்ணீர், உப்பு, இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை நறுக்கியது, ஓமப்பொடி, பன்னீர், சாட் மசாலா தூள், வெண்ணெய்.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓமம், உப்பு சேர்த்து கலந்து விட்டு, சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.மாவு திரண்டு வந்த பின் 10 நிமிடம் பிசைந்து, பாத்திரத்தை மூடி 30 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு ஒரு குக்கரில் நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பச்சை பட்டாணி ,தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். வெந்தவுடன் காய்கறியில் உள்ள தண்ணீரை வடிகட்டி, அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து விட்டு மசிக்கவும்.
சப்பாத்தி கல்லில் மாவை தூவி, ஒரு சிறிய அளவு பிசைந்த மாவு உருண்டையை வைத்து தேய்க்கவும். பிறகு தேய்த்த மாவின் மேல் உருளைக்கிழங்கு மசாலா, ஓமப்பொடி, துருவிய பன்னீர், சாட் மசாலா தூள் சேர்த்து, மாவை அனைத்து பக்கங்களில் இருந்து சேர்த்து மூடி தேய்க்கவும்.
அடுத்து தவாவை சூடாக்கி தேய்த்த மாவை வைத்து, இரண்டு பக்கமும் வேகவைக்கவும். பின்பு வெண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேகவைக்கவும். சூடான ஷாஹி வெஜ் பராத்தா தயார்.