மல்லிப்பூ இட்லிக்கு இந்த வடகறிய ட்ரை பண்ணி பாருங்க..அட்டகாசமா இருக்கும்!
தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு - 200 கிராம், காய்ந்த மிளகாய் -3 , சோம்பு - 1 தேக்கரண்டி, எண்ணெய், பிரியாணி இலை - 2 , கிராம்பு, பட்டை , ஏலக்காய் - 2 , சோம்பு - 1 தேக்கரண்டி, அன்னாசிப்பூ - 1, வெங்காயம் - 2 நறுக்கியது , பச்சை மிளகாய் - 5 கீறியது , இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை , தக்காளி - 2 நறுக்கியது , உப்பு - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, தண்ணீர், கொத்தமல்லி இலை - நறுக்கியது
செய்முறை : கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய பருப்பை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் அரைத்த பருப்பு மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் உதிரி உதிரியாக வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, ஏலக்காய், சோம்பு, அன்னாசிப்பூ சேர்த்து வறுக்கவும்.
அதன்பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும், அதன் பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
தக்காளி வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கலந்து விடவும். அடுத்தது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையை சேர்த்து கலந்து விட்டு கடாயை 10 நிமிடம் மூடி வைத்து வேகவைக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான சென்னை ஸ்டைல் வடகறி தயார்.