Oppenheimer Movie Review : கொடுத்த ஹைப்பை பூர்த்தி செய்ததா ஓப்பன்ஹெய்மர்..? குட்டி விமர்சனம் இதோ..!
அணு ஆயுதத்தை கண்டுபிடித்த ராபர்ட் ஜே ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கையை மையமாக வைத்து கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் படம் ஒப்பன்ஹெய்மர் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஓப்பன்ஹெய்மர் படம், வரலாற்றின் ஒரு மிக முக்கியமான தருணத்தையும் அதை நிகழ்த்திய தனிநபர் ஒருவரின் உணர்வெழுச்சிகளையும் மிகச்சிறந்த திரை அனுபவமாக நமக்கு கொடுக்கிறது .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅணு ஆயுதத்தின் தந்தை என்று உலகமே கொண்டாடிய ஓப்பன்ஹெய்மர் ஒரு கம்யூனிஸ ஆதராவளர் என்கிற அவர்மீதான குற்ற விசாரணையில் இருந்து தொடங்குகிறது படம். தன் மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு தன் சார்பில் விளக்கம் தரும் ஒப்பன்ஹெய்மரின் பார்வையில் பின்னுக்குச் செல்கிறது கதை.
இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம். ஹிட்லரின் நாஜிப்படை உலகையே கைபற்றும் நோக்கத்தோடு வளர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இணைந்து ஹிட்லரை எதிர்த்து வருகிறார்கள். ஒவ்வொரு நாட்டின் விஞ்ஞானிகளும் ரகசிய ஆய்வுக்கூடங்களில் அணு ஆயுதத்தை கண்டுப்பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போது கேள்வி ஒன்றே ஒன்றுதான் யார் அதை முதலில் செய்து முடிக்க போகிறார்கள். இதனை முதலில் சாதிப்பவர்களுக்கு இந்த மொத்த உலகமே அடிமை.
உலகையே கைக்குள் வைக்கும் ஒரு ஆயுதத்தை கண்டுபிடிக்கும் ஒருவர் தான் உருவாக்கிய ஆயுதம் ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரும் விளைவுகளை எதிர்கொள்ளும் தருணங்களை ஓப்பன்ஹெய்மரின் பார்வையில் சொல்கிறது படம்.
மூன்று மணி நேரங்கள் வெறும் வசனங்களால் மட்டுமே நகர்கிறது கதை. ஆனால் படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வசணமும் சுவாரஸ்யம் குறையாமல் நம்மை கவணிக்க வைக்கிறது. மேலும் படத்தை நோலன் ஐமேக்ஸில் எடுக்க விரும்பியதற்கான முக்கியமான காரணமும் அதுவே. ஓப்பன்ஹெய்மரின் இடத்தில் நம்மை நிறுத்துவதற்காகவே ஒவ்வொரு காட்சியும் அந்த வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சின்ன அசைவின், காற்றின், ஒலி நம்மை ஒரு காட்சியின் பதற்றத்தை உணரவைக்க முயன்றிருக்கிறார்.
ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிச் செல்லும் அம்சமான அணு குண்டு பரிசோதனை செய்யும் காட்சி திரையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஒரு சாதனை. இந்த காட்சியை நெருங்கும்போது பார்வையாளர்களாகிய நமது இமைகள் மூடாமல் பார்த்து ரசிக்கலாம்.
இதுவரை நோலன் படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்த கிலியன் மர்ஃபி இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஓப்பன்ஹெய்மராக சுவாசித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரத்தின் மனதில் ஓடும் எண்ணங்கள் நடிப்பில் வெளிப்படுவதை காணலாம். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராபர் டெளனியை சூப்பர் ஹீரோ படங்களைத் தவிர்த்து நடிப்பிற்கு முக்கியத்துவன் அளிக்கப்படும் படங்களில் இன்னும் அதிகமாகவே ரசிக்க முடிகிறது. ஃப்ளோரன்ஸ் பியூ, எமிலி ப்ளண்ட் மற்றும் மேட் டேமன் தங்களது கதாபாத்திரங்களை திறம்பட செய்திருக்கிறார்கள்.
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியப் படங்களில் நிச்சயம் ஓப்பன்ஹெய்மர் ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அணு ஆயுதத்தின் கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த மனித சமூதாயத்தின் இருப்பையே ஊசலாட்டத்தில் வைத்திருக்கும் அபாயத்தை ஓப்பன்ஹெய்மரின் குற்றவுணர்ச்சியால் உணர்த்துகிறார் நோலன்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -