Leo Movie Flashback : இருதய ராஜ் சொன்ன கதை பொய்..அப்போ லியோவுக்கு என்னதான் ஆச்சு?
விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது. இப்படம் கோடிக்கணக்கில் வசூல் செய்து, 1000 கோடி கிளப்பில் இணையும் என்று கூறப்பட்டது. விடுமுறை காலத்தில் வெளியான இது 500 கோடி ரூபாய் வசூலை மட்டுமே பெற்றது. படப்பிடிப்பில் தொடங்கி போஸ்ட் ப்ரடக்ஷன், ப்ரோமோஷன் என அனைத்திலும் தீவரம் காட்டியும் பாக்ஸ் ஆஃபிஸில் சற்று சுமாரான பர்ஃபார்மன்ஸையே செய்தது லியோ.
இதற்கு முக்கிய காரணம் படத்தின் மீது இருந்த ஹைப்தான். முதல் பாதியில் பார்த்திபனாக நடித்த விஜய் அனைவரையும் கவர்ந்தாலும், இருதய ராஜ் சொன்ன ப்ளாஷ்பேக் ஏற்றுக்கொள்ளமுடியாத கதையாக இருந்தது. கைதி, விக்ரம் படத்தில் வந்த கதாபாத்திரங்கள், லியோ படத்தை எல்.சி.யூவிற்கு அழைத்து சென்றது.இதனால் லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது.
“இப்படம் லோகேஷ் கனகராஜ் படம் கிடையாது, இது விஜய்யை மட்டும் சுற்றி சுற்றி காண்பிக்கும் அக்மார்க் விஜய் படம், வருபவர்கள் எல்லாம் விஜய்யால் செத்து மடிகிறார்கள், வில்லன்களின் கேரக்டர் சரியாக எழுதப்படவில்லை.” போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. படம் வெளியான பின், வசன கர்த்தாவான ரத்னா குமார், லியோ கதாபாத்திரம் ஒரு மிஸ்டரி. அதைப்பற்றி லோகேஷ் இனி வரும் நேர்காணல்களில் விளக்கம் கொடுப்பார் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். ஒரு சிலர், “படம் சரியில்லை என்று தெரிந்தும் எப்படியெல்லாம் சமாளிக்கிறார்கள்”என்று தங்களின் கருத்துக்களை பதிவிட தொடங்கினர்
சமீபத்திய நேர்காணலில் பேசிய லோகேஷ், “இந்த கதையை பார்த்திபன் அவர் வாயில் இருந்து சொல்லவில்லை. மூன்றாவது நபரான மன்சூர் அலிகான் சொன்னதுதான். அது உண்மையாக இருக்கலாம். பொய்யாக இருக்கலாம். மன்சூர் கதை சொல்லும் போது அனைத்து கதைக்கும் வெவ்வேறு கோணங்கள் இருக்கும் என சொல்லிதான் தொடங்குவார். பிலோமின் ராஜ் , இந்த வசனம் அடுத்த 20 நிமிடங்களுக்கு சொல்லப்போவது பொய்தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றார். அதனால் இந்த வசனத்தை நாங்கள் எடிட் செய்து விட்டோம். ” என்று கூறினார். படத்திலும், கெளதம் மேனன் “அதுக்கு மேல உண்மையை சொல்ல வேண்டும் என்றால் லியோதான் உயிரோடு வந்து சொல்ல வேண்டும்”என வசனம் பேசியிருப்பார்.
“லியோ என்பவர் நிஜமாகவே இறந்துவிட்டார்..அவரை கொன்றதே விக்ரம்தான், இப்போது இருக்கும் பார்த்திபன் ப்ளாக் ஸ்குவாட் மெம்பர், சத்தியமங்கலத்தின் காப்பகத்தில் வளர்ந்த சத்யா அமர் போன்ற ஒரு ஏஜண்ட், ஹரோல்ட் தாஸின் மகன்தான் ரோலக்ஸ், டில்லியின் அப்பாதான் வையாபுரி, லியோவும் டில்லியும் சிறுவயது நண்பர்கள், அனுராக் காஷ்யப் சாகவில்லை..இரண்டாம் பாகத்தில் அவர்தான் பெரிய வில்லன்.” என புது புது தியரியை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
க்ளைமாக்ஸில், நான்தான் லியோ தாஸ் என்ற ட்விஸ்ட், நிஜமாகவே வில்லன் யாரு என்ற கேள்வியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விளக்கம் இனிவரும் எல்.சி.யூ படங்களை பார்த்தால் புரியும்.