Isai Vani: 'ஐ ஆம் சாரி ஐயப்பா' பாடலை பாடி சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம் இசைவாணி!
சென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்தவர் கானா பாடகி இசைவாணி. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிங்கிங் ஸ்டார்ஸ் மூலமாக தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழர்களே தமிழர்களே மற்றும் வணக்கம் தமிழா நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இசைவாணி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு கிட்டத்தட்ட 49 நாட்கள் தாக்குப்பிடித்தார்.
இந்நிகழ்ச்சியின் மூலமாக எல்லோராலும் அறியும் ஒரு கானா பாடகியாக வலம் வந்தார். இந்த நிலையில் தான் ஐயப்பன் பற்றி இவர் பாடிய பாடலால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பொதுவாக கார்த்திகை மற்றும் மார்கழியில் ஐயப்பன் மற்றும் முருகனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து பாத யாத்திரை செல்வது வழக்கம். இதில், சபரிமலைக்கு பெண்கள் செல்லக் கூடாது ஒரு நம்பிக்கை இருந்தது. ஏனென்றால் சபரிமலைக்கு என்று சில கதைகளும், கட்டுப்பாடுகளும், சடங்குகளும் பின்பற்றப்படுகிறது. பல மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு ஐயப்பனை காண வருவார்கள்.
இதில் பெண்களுக்கு மட்டும் அனுமதியில்லை. இதற்கு ஏராளமான புராணக் கதைகள் சொல்லப்பட்டாலும் முதன்மையானதாக கருதப்படுவது ஐய்யப்பன் கன்னிசாமி என்பதாலும், அவர் கட்ட பிரம்மச்சாரி என்பதாலும் தான். ஐயப்பனுக்கு மாலை அணியும் பக்தர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் காலை மாலை இருவேளை குளித்து, ஒருவேளை உணவருந்தி ஐயப்பனை நினைத்து விரமிருந்து வழிபட்டு இருமுடி கட்டி ஐயனை காண சபரிமலைக்கு வருவார்கள். இதில் முதல் முறையாக மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் கன்னிசாமிகள் என்று அழைக்கப்படுவார்கள்.
அப்படிப்பட்ட ஐயப்ப பக்தர்களின் உணர்வை சீண்டும் விதமாக ஒரு பாடலை பாடி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இசைவாணி. மார்கழியில் மக்களிசை என்பது நீலம் கலாச்சார மையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இசை விழா. இது இந்தியா முழுவதும் உள்ள மக்கள் கலைஞர்களை அழைத்து வருவதை நோக்கமாக கொண்டுள்ளது.
கடந்த மாதம் நடத்தப்பட்ட இசை விழாவில் கானா பாடகி இசைவாணியும் கலந்து கொண்டு 'ஐ ஆம் சாரி ஐயப்பா நா உள்ள வந்தா என்னப்பா... நான் தாடி காரன் பேபி இப்போ காலம் மாறி போச்சு, நீ தள்ளி வச்சா தீட்டா நான் முன்னேறுவேன் மாசா என்று பாடலை பாடி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
இது பெண்கள் சபரிமலைக்கு ஏன் வரக் கூடாது என்று ஐயப்பானையே கேள்வி கேட்கும் விதத்திலும், காலம் காலமாக இருக்கும் பத்தர்கள் வழக்கத்தை கேலி செய்யும் விதத்தில் ஐயப்ப பக்தர்களின் உணர்வை சீண்டும் வகையிலும் அமைந்திருப்பதாக கொந்தளித்து வருகின்றனர் ரசிகர்கள்.