Captain Miller Teaser : அரைத்த மாவை அரைக்கும் தமிழ் சினிமா..எப்படி இருக்கு கேப்டன் மில்லர் டீசர்?
அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷான், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.கேப்டன் மில்லரின் டீசரானது நடிகர் தனுஷின் பிறந்தநாளையொட்டி, இரவு 12:01 மணிக்கு வெளியானது. இந்த டீசரின் குட்டி விமர்சனத்தை இங்கு காணலாம்.
தனுஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆரம்பிக்கும் இந்த டீசரில் எடுத்தவுடன் வரும் பின்னணி இசை கே.ஜி.எஃபை நினைவுக்கு கொண்டு வருகிறது. பிரசாந்த் நீலின் படம் பார்த்ததால் என்னவோ தெரியவில்லை, பார்க்கும் அனைத்து படமும் அதையே கண் முன் நிறுத்துகிறது.
அடிக்கடி கெட்-அப்பை மாற்றி வலம் வரும் மில்லராகிய தனுஷ் வாண்டட் லிஸ்டில் இருக்கிறார். தன்னை நோக்கி பாயும் தோட்டாவில் இருந்து தப்பிக்க, புல்லடில் அசுர வேகத்தில் செல்கிறார் நாயகன்.
வெளிநாட்டவர்கள் இந்த டீசரில் இடம்பெறுவதால், சுதந்திரம் வாங்கும் காலகட்டத்தில் நகரும் கதையாக கேப்டன் மில்லர் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட் தரத்தில் மேக்கிங் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்காக போராடிய கோமரம் பீம், அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரை பற்றி தழுவி எடுக்கப்பட்ட படமான ஆர்.ஆர்.ஆர் உலகளவில் ஹிட்டானது. இவர்களை போல் கேப்டன் மில்லர் எனும் கதாபாத்திரம் கடந்த காலத்தில் வாழ்ந்த ஒரு தனிப்பட்ட நபரை குறிப்பதாக இருக்கலாம் அல்லது வரலாறு சம்பந்தப்பட்ட புனைவு கதையாக இருக்கலாம் அல்லது இப்படம் முழுக்க முழுக்க ஒரு கற்பனை கதையாக கூட இருக்கலாம்.
தமிழ் சினிமா பொறுத்தவரை ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு ஜானர் படம் தொடர்ந்து வெளியாகும். முன்பு பேய் படங்கள் ஹிட்டானதால் தொடர்ந்து பேய் படங்கள் வெளியானது. அதுபோல், இப்போது விண்டேஜ் காலகட்ட கதைகள் கைகொடுப்பதால், அவையே தொடர்ச்சியாக படமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தனுஷின் கேப்டன் மில்லர் இணையப் போகிறது என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.