Condolences to Marimuthu : பிரபலங்களை கலங்கடித்த மாரிமுத்து.. இணையத்தில் குவியும் இரங்கல்!
சில வாரங்களுக்கு முன்பு ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆர்.எஸ்.சிவாஜி செப்டம்பர் 2 ஆம் தேதி காலமானார். அதையடுத்து இன்று காலை எதிர்பாராத விதமாக மாரிமுத்துவும் காலாமானார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவருடன் பணியாற்றிய பல திரைபிரபலங்களும், சின்னத்திரை கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“இயக்குநரும், பிரபல குணச்சித்திர நடிகருமான அன்பு நண்பர் மாரிமுத்து அவர்கள் திடீர் மாரடைப்பால் மறைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மேஜிக் பிரேம்ஸுடன் இணைந்து தயாரித்த 'புலிவால்' திரைப்படத்தில் அவருடன் பணியாற்றிய நாட்களை நினைவுகூறுகிறேன். வேறு எவராலும் பூர்த்தி செய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கி மறைந்த அவரது பிரிவால் தீராத வேதனையில் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கலைத்துறையினர், ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” சரத்குமார்
“ இயக்குநர் ஜி மாரிமுத்துவின் மறைவு அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். கண்ணும்கண்ணும், புலிவால் ஆகியத் திரைப்படங்களில் நாங்கள் இணைந்து பணியாற்றினோம் . எங்களுக்கு சகோதரர்கள் போன்ற ஒரு உறவு இருந்தது. எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த பல்வேறு கருத்து வேறுபாடுகளை ஒப்புக்கொண்டோம். அவரது வாழ்க்கை எளிதானதாக இருக்கவில்லை. ஒரு நடிகராக அவர் இப்போதுதான் முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் இன்னும் சிறிது காலம் நம்முடன் இல்லாமல் போனதில் வருத்தமடைகிறேன். போயிட்டுவாப்பு….”என்று தனது எக்ஸ் பதிவிட்டுள்ளார் பிரசன்னா.
“தம்பி மாரிமுத்துவின் மரணச் செய்தி கேட்டு என் உடம்பு ஒருகணம் ஆடி அடங்கியது. சிகரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை மரணத்தின் பள்ளத்தாக்கு விழுங்கிவிட்டது.என் கவிதைகளின் உயிருள்ள ஒலிப்பேழை அவன். என் உதவியாளராய் இருந்து நான் சொல்லச் சொல்ல எழுதியவன். தேனியில் நான்தான் திருமணம் செய்துவைத்தேன். இன்று அவன்மீது இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு இதயம் உடைகிறேன். குடும்பத்துக்கும் கலை அன்பர்களுக்கும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே ஆறுதல் சொல்கிறேன்.” - வைரமுத்து
எக்ஸ் பக்கத்தில், நடிகர் மாரிமுத்துவின் புகைப்படத்தை பதிவிட்டு இரங்கல் தெரிவித்த விஜய் சேதுபதி.
“நடிகர் மற்றும் இயக்குநர் மாரிமுத்து அண்ணனின் மறைவு ரொம்ப அதிர்ச்சியாக இருக்கு. அவருடன் சேர்ந்து ஜீவா படத்தில் வொர்க் பண்ணேன். ரொம்ப அற்புதமான நடிகர். நல்ல மனிதர். சமீபத்தில் சிறந்த நடிகருக்கான சன் விருதைகளை வாங்கினார். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.” - இயக்குநர் சுசீந்திரன்
‘அதிர்ச்சியாக உள்ளது.. என்னால் நம்ப முடியவில்லை..” என பிரபு தேவா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“இந்த செய்தி என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். உங்களுடன் செலவிட்ட நேரங்களை நினைவு கூறுகிறேன்.” - இயக்குநர் நெல்சன்
சில நேரங்களில் வாழ்க்கை நம் தலையில் கல்லால் அடிக்கும்” - இயக்குநர் பாண்டியராஜின் இரங்கல் பதிவு.
“இந்த செய்தியை கேட்க அதிர்ச்சியாக உள்ளது. சமீபத்தில், உங்களுடைய படங்களையும் நாடகங்களையும் பார்த்து வந்தேன். ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.” - சாந்தனு
“இந்த செய்தியை கேட்கும் போது, சோகமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது” - சசிகுமார்
நடிகர் ரஜினிகாந்தின் இரங்கல் பதிவு..