சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நாளை ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில், மோடியை தொடர்புகொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, புதினிடம் உடனடி போர் நிறுத்தம் குறித்து பேசுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடியிடம் ஜெலன்ஸ்கி பேசியது என்ன.?
சீனா சென்றுள்ள பிரதமர் மோடியை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, புதினிடம் பேச உக்ரைன் தயாராக இருக்கும் போதிலும், பொதுமக்களை குறி வைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையும், அதில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டது குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார்.
மேலும், உடனடி போர் நிறுத்தம் தேவை என்றும், சண்டை தொடரும் பட்சத்தில், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த மாதம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் சந்திப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கிய ஜெலன்ஸ்கி, சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும், புதினை சந்திக்கும்போது, போர் நிறுத்தம் குறித்து அழுத்தம் கொடுப்பீர்கள்(மோடி) என எதிர்பார்ப்பதாகவும் ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
அதோடு, தான் பேசும்போது, புதினிடம் சரியான முறையில் பேசுவதற்கு மோடி தயாராக இருப்பதாக தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, தற்போது நடந்துவரும் போர் குறித்து மனிதாபிமான அடிப்படையில் பார்வைகளை இருவரும் பகிர்ந்து கொண்டதாகவும், அமைதி ஏற்பட முயற்சி மேற்கொள்வது குறித்தும் மோடியிடம் பேசியதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் பதிவு
இதைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன்னை தொடர்பு கொண்டது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், தனக்கு போன் செய்த அதிபர் ஜெலன்ஸ்கி-க்கு நன்றி என தெரிவித்துள்ளார் மோடி. மேலும், தற்போது நடைபெற்றுவரும் போர் குறித்து, மனிதாபிமான அடிப்படையிலான பார்வைகளை பகிர்ந்து கொண்டதாகவும், அமைதி ஏற்படுவதற்கான முயற்சிகள் குறித்தும் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
அமைதி ஏற்படுவதற்கான முயற்சிகளில் இந்தியா அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவின் மூலமாக உறுதி அளித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரை காரணம் காட்டி தான் ட்ரம்ப் இந்தியாவிற்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இந்நிலையில், புதினை சந்திக்கும் பிரதமர் மோடி, எந்த மாதிரியான முடிவுகளை எடுப்பார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.