PM Modi CHina Trump: பிரதமர் மோடியின் சீன வருகையால் ஏற்பட்ட அதிருப்தியை தொடர்ந்து, குவாட் மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் திட்டத்தை ட்ரம்ப் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சீனாவில் பிரதமர் மோடி
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சீனாவின் தியான்ஜின் நகரை சென்றடைந்தார். கடந்த 7 ஆண்டுகளில் முதல்முறையாக சீனாவிற்கு சென்ற அவருக்கு, சிவப்பு கம்பளத்துடன் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் மோடி முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார். இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததை தொடர்ந்து, சீனாவுடனான தனது உறவுகளை இந்தியா மீட்டமைத்து வரும் நிலையில் இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மீண்டும் வலுப்பெறும் இந்தியா - சீனா உறவு
கடந்த ஜூன் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லையில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே நடந்த கொடிய மோதல்களுக்குப் பிறகு இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன. இந்நிலையில், இன்று நடைபெற உள்ள மோடிக்கும் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக் மோதலை தொடர்ந்து கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள உறவுகளை மேலும் இயல்பாக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார உறவுகள் குறித்த விவாதங்கள் இடம்பெற உள்ளன. அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களை கூட்டாக எதிர்கொள்வது எப்படி என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது.
கடுப்பான ட்ரம்ப்:
இதனிடையே, நடப்பாண்டின் இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள க்வாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க, டெல்லி வரவிருந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 26 உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள, மோடி சீனா சென்றதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் வரி விதித்தது, பாகிஸ்தான் உடனான ராணுவ மோதலை நான் தான் பஞ்சாயத்து செய்து நிறுத்தினேன் என ட்ரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். இது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், சீனா உடனான தனது வர்த்தக உறவை மீண்டும் வலுப்படுத்த இந்தியாவும் தீவிரம் காட்டுகிறது.
இந்தியாவை குறிவைக்கும் அமெரிக்கா:
அமெரிக்க பொருட்களுக்கு தங்கள் நாட்டு சந்தையை திறந்து விடாததால், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணமாக காட்டி இந்தியா மீது 50 சதவிகிதம் வரியை ட்ரம்ப் விதித்துள்ளார். அதேநேரம், ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்கும் சீனா மீது அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை. தீவிரவாத அமைப்புகளுக்கு துணைபோகும் பாகிஸ்தான் மீது கூட 19 சதவிகித வரி விதித்துள்ளார். ஆனால், இந்தியா மீது 50 சதவிகித வரி விதித்து இருப்பது, இருநாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக நீடித்து வந்த நல்ல உறவில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்திய பயணத்தை ட்ரம்ப் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.