யோகா ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது என்று யுனெஸ்கோவில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் சத்குரு தெரிவித்துள்ளார்.


உலகம் முழுவதும் ஜூன் 21ஆம் தேதி அன்று 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பாரிஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில்  யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சத்குரு, ‘விழிப்புணர்வான உலகத்தை உருவாக்குவோம்’ என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றினார்.


அப்போது அவர் பேசியதாவது:


சர்வதேச யோகா தினம் என்பது எல்லோராலும் கொண்டாடப்படும் தினங்களைப் போல இன்னொரு தினமில்லை. இது அர்ப்பணிப்புக்கான ஒரு நாள். நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறப்பான முறையில் இருப்பதே, இந்த உலகிற்கு நீங்கள் அளிக்கும் சிறந்த பங்களிப்பாகும்.


ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தம்


யோகா, உண்மையில் பாரத தேசத்தில் தோன்றியது என்பதை எண்ணி நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம். ஆனால், அனைவரும் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதிகப்படியான தேசப் பற்று கொண்ட சிலர், என்னுடைய இந்த கருத்துடன் முரண்படுவார்கள் என எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்கிறேன், யோகா என்பது நம் பாரத தேசத்திற்குச் சொந்தமானது இல்லை. அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது. 


ஒருவரின் சிந்தனை உணர்ச்சி, செயலை, விழிப்புமிக்க நடைமுறையாக மாற்றுவது எவ்வளவு முக்கியமானது என்பதை அவர் உணர வேண்டும். அதற்கு யோகா சிறந்த முறையில் உதவுகிறது.’’


இவ்வாறு சத்குரு தெரிவித்தார். 


 






யுனெஸ்கோ யோகா தின நிகழ்ச்சியில் மேலும் பேசிய சத்குரு, ’’ஏற்கெனவே இருக்கும் ஒன்றைக் கண்டறிவது எந்த மக்களுக்கும் சொந்தமாகாது. எனினும் புதிதாக ஒன்றைக் கண்டு பிடிப்பது, அந்த மக்களுக்குச் சொந்தமாக இருக்கும்.  எனவே ஏற்கெனவே இருக்கும் ஓர் உண்மையை நாம் கண்டறிவதால் மட்டுமே, அது உங்களுக்கோ எனக்கோ சொந்தமாகி விடாது. தனக்கான வழியைக் கண்டுபிடிப்பது தான் ஒவ்வொரு மனிதனின் உரிமையாக இருக்கும்.


யோகா செய்யும் நீங்கள் தனிமையாக என்றுமே இருக்க மாட்டீர்கள். ஏனெனில் இந்த பிரபஞ்சத்தில் அப்போது நீங்கள் மட்டுமே இருப்பீர்கள். எல்லாமே நீங்கள் தான். நீங்கள் மட்டும் தான். உங்களை நீங்களே அதிகமாகக் காணும்போது, உங்களின் கண்களை மூடிக் கொண்டு அமருங்கள். தியானத்தில் மூழ்குங்கள்.’’ என்று சத்குரு தெரிவித்தார்.