புகுஷிமா அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் நிகழ்ந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்துள்ளது.


தொடரும் மீட்பு பணிகள்


கடந்த வியாழனன்று துருக்கி மற்றும் சிரியா எல்லைப்பகுதியில் அதிகாலை தொடங்கி மாலை வரை, அடுத்தடுத்து 3 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. காலை நேரம் என்பதால் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள்  உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் துருக்கி மற்றும் சிரியாவை சேர்ந்த உள்நாட்டு மீட்பு படையினர் மட்டுமின்றி, இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய்களின் உதவியுடனும், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள், கடும் பனிப்பொழிவால் தங்க இடம் இன்றி தவித்து வருகின்றனர். 29 மணி நேரத்திற்கு பிறகும் சிலர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்களும் அங்கு நடைபெற்று வருகிறது. அதேநேரம், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவரளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 


21,000 பேர் பலி:


இந்நிலையில் தான் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 21,000 -ஐ கடந்துள்ளது. குறிப்பாக துருக்கியில் பலியானோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், சிரியாவில் மட்டும் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது, கடந்த 2011ம் அண்டு ஜப்பானின் புகுஷிமா நகரில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கடந்துள்ளது.


புகுஷிமா அணு உலை விபத்து:


ஜப்பான் நாட்டில், 2011-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, அந்தாண்டின் மார்ச் மாதம் 11ம் தேதி சுனாமி பேரலை அந்நாட்டை கடுமையாக தாக்கியது. இதில் மிகப்பெரிய சேதத்தைச் சந்தித்தது புகுஷிமா பகுதியில் அமைந்திருக்கும் அணு உலை.  டாய்ச்சி எனப்படும் அந்த அணு உலைக்குள் கடல்நீர் பெருமளவில் புகுந்ததால், அங்குள்ள மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் சேதமடைந்தன. இதன் காரணமாகக் குளிரூட்டும் சாதனங்கள் செயலிழக்க, அணு உலையில் வெப்பம் அதிகரித்தது. இதன் விளைவாக சுற்றியிருக்கும் பகுதிகளில் கதிர்வீச்சின் தாக்கம் அதிகமானது. காற்றில் பரவும் கதிர்வீச்சைத் தடுக்கவும், வெப்பத்தைக் குறைக்கவும் லட்சக்கணக்கான லிட்டர் டன் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் 18,400-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், ரஷ்யாவில் 1986-ம் ஆண்டு நடந்த செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணு உலை விபத்தாக புகுஷிமா அணு உலை விபத்து கருதப்பட்டது. இந்நிலையில், அந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை காட்டிலும், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் தற்போது கூடுதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.