சித்தார்த் ஷுக்லா மரணத்துக்கு WWE ஜான் சீனா அஞ்சலி!
தனது இன்ஸ்டா பக்கத்தில் சித்தார்த் சுக்லாவின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்தி பிக்பாஸ் 13 வெற்றியாளரும் பிரபல பாலிவுட் நடிகருமான சித்தார்த் ஷுக்லா அண்மையில் மாரடைப்பால் காலமானார். 40 வயதான சித்தார்த்தின் திடீர் மரணம் இந்தி திரைத்துறை மற்றும் சீரியல் நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மும்பையில் உள்ள தனது இல்லத்தில் இறந்து கிடந்த சித்தார்த் மும்பை போலீசால் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கே அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது இறப்புக்கு பல்வேறு நடிகர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் தற்போது WWE நட்சத்திரமான ஜான் சீனாவும் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் சித்தார்த் சுக்லாவின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அந்தந்த வாரங்களில் நிகழ்ந்தவற்றின் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ள ஜான் சீனா இந்த முறை சித்தார்த் சுக்லாவின் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஜான் சீனா இந்தியர்களைப் பற்றிப் பதிவிடுவது இது முதன்முறையல்ல . பிக்பாஸ் 13 பற்றி தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ச்சியாகப் பதிவிட்டு வந்துள்ளார் ஜான் சீனா. பிக்பாஸ் 13 போட்டியில் பங்கேற்ற அசீமின் புகைப்படத்தை அவர் கடந்த ஜனவரியில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது சித்தார்த்தின் திடீர் மறைவை அடுத்துத் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக மும்பையில் தனது அம்மா மற்றும் தன்னுடைய இரு சகோதரிகளுடன் சித்தார்த் வசித்து வந்தார். சமீபத்தில் நடந்த பிக் பாஸ் மற்றும் டான்ஸ் டிவானே போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் சித்தார்த்.1980ம் ஆண்டு டிசம்பர் 12ல் பிறந்த சித்தார்த் குடும்பத்தின் பூர்வீகம் உத்தரபிரதேசம் ஆகும். பள்ளிப்படிப்பை ஷேவியர் பள்ளியில் முடித்த சித்தார்த், இண்டீரியர் டிசைனிங்கில் தன் கல்லூரி படிப்பை முடித்தார். சித்தார்த்தின் மறைவுக்கு இந்திய திரையுலகமே அஞ்சலி செலுத்தி வருகிறது. அவரது ரசிகர்கள் பலரும் தொடர்ந்து தங்களது வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.