கணவனைக் கொன்ற எழுத்தாளருக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தைச் சேர்ந்தவர் நான்சி க்ராம்ப்டன் ப்ராபி. இவரது கணவர் டேனியல் ப்ராபி. எழுத்தாளரான நான்சி க்ராம்ப்டன் “தி ராங் ஹஸ்பண்ட்”, “தி ராங் லவ்வர்” உள்ளிட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். இவரது கணவரான டேனியல் ப்ராபி ஓரிகான் சமையல் பயிற்சிமையத்தில் ஆசிரியராகவும், சமையல் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் கல்லூரியின் சமையலறையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். கொலைக்கு யார் காரணம் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவரது மனைவி தான் டேனியலுக்கு வரவேண்டிய 1.5 மில்லியன் டாலர் இன்ஸ்யூரன்ஸ் பணத்திற்காக அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
நான்சி க்ராம்ப்டன் எழுதிய “ஹவ் டு மர்டர் யுவர் ஹஸ்பண்ட்(உங்கள் கணவனை கொலை செய்வது எப்படி)” என்ற புத்தகத்தை வைத்து காவல்துறையினர் துப்புதுலக்கினர். இந்த புத்தகத்தில் துப்பாகி, கத்தி, விஷம் ஆகியவற்றின் மூலம் எப்படி கொல்வது என்று எழுதியிருந்தார். அந்த புத்தகத்தில் “உண்மையில் அவர்களைக் கொல்வதை விட, இறந்து போனதை விரும்புவது எளிது என்றும், கொலை தான் என்னை விடுவிக்க வேண்டும் என்றால், நான் நிச்சயமாக சிறையில் இருக்க விரும்பவில்லை” என்றும் கூறியிருந்தார்.
ஆனால், இது கொலை நடப்பதற்கு முன்பே ஒரு செமினாருக்காக எழுதப்பட்டது என்பதால் அதனை ஆதாரமாக எடுத்துக்கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஆனாலும், டேனியலை கொலை செய்தது நான்ஸி தான் என்று வாதிட்டதோடு, டேனியலை கொள்வதற்கான தேவை நான்ஸிக்கு இருந்ததை நீதிபதிகளிடம் விளக்கினர். இருவரும் ஒரு சமயத்தில் பொருளாதார நிலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். அதனால், டேனியல் உயிரிழந்தால் அவருக்கு 1.5 மில்லியன் டாலர்கள் இன்ஸ்யூரன்ஸ் கிடைக்கும் என்பதை அறிந்து அவரை கொலை செய்ய திட்டமிட்ட நான்ஸி, டேனியலை அவர் பணியாற்றிய கல்லூரியில் வைத்து கொலை செய்திருக்கிறார். கொலை நடந்த சமயத்தில், நான்ஸி அவரது வீட்டிற்கும், கல்லூரிக்கும் தன் காரில் சென்று வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பதை நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.
அதோடு, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில், நான்ஸி ஆன்லைனில் ஒரு துப்பாக்கியை ஆர்டர் செய்ததும் தெரிய வந்தது. வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட 12 பேர் கொண்ட நடுவர் மன்றம் இரண்டு நாட்களுக்கும் குறைவான விவாதத்திற்குப் பிறகு நான்ஸி இரண்டாம் நிலை கொலைக்கு குற்றவாளி என்று கண்டறிந்தது.
கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், மேல்முறையீட்டிற்குச் செல்லவிருப்பதாக நான்ஸியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்புக்குப் பிறகு டேனியலின் நண்பர்கள், உறவினர்கள் நான்ஸியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “நீங்கள் பொய் சொல்லவும், ஏமாற்றவும், திருடவும், ஏமாற்றவும், இறுதியில் உங்களின் மிகப்பெரிய ரசிகராக இருந்தவரைக் கொல்லவும் முடிவு செய்துவிட்டீர்கள்" என்று ப்ராபியின் முதல் மனைவியின் மகன் நதானியேல் ஸ்டில்வாட்டர் கூறினார்.