கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியை சேர்ந்த அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, 2021ஆம் ஆண்டு, ஜனவரி 6ஆம் தேதி, நாடாளுமன்றம் கூடி தேர்தலில் வெற்றி பைடனுக்கு சான்றிதழ் வழங்கவிருந்தது. அப்போது, அவரது ஆதரவாளர்கள், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இதற்கு முன்னதாக, ஆதரவாளர்களை தூண்டி விடும் விதமாக டிரம்ப் பேசியது வன்முறைக்கு பெரும் காரணியாக அமைந்தது. தேரத்லில் முறைகேடு நடந்திருப்பதாக எந்த வித ஆதாரமும் இன்றி, டிரம்ப் பொய்யான தகவல்களை பகிர்ந்திருந்தார். இதனிடையே, வன்முறை குறித்து நாடாளுமன்ற குழு வெளியிட்ட அறிக்கையிலும், கலவரத்திற்கு டிரம்பே முழு காரணம் என குறிப்பிட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவம் திடீரென நடைபெறவில்லை என்றும் திட்டமிட்ட சதி என்றும் பல திடுக்கிடும் தகவல்களை நாடாளுமன்ற குழு வெளியிட்டிருந்தது. 2020 தேர்தல் முடிவுகளை மாற்ற நடத்தப்பட்ட தோல்வியில் முடிந்த முயற்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத குழுக்கள் தலைமையில் நாடாளுமன்றத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிடும் வீடியோ ஒன்றையும் குழு வெளியிட்டுள்ளது.
இதை கடுமையாக விமரிசித்துள்ள டிரம்ப், நீதி கேலிக்கூத்தாக்கப்பட்டதாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள 12 பக்க அறிக்கையில், "நாட்டின் முக்கிய பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் ஜனநாயக கட்சியினர் தலைமையிலான விசாரணை குழு மக்களை திசை திருப்ப முயற்சிகிறது.
உண்மை என்னவென்றால், 2021ஆம் ஆண்டு, ஜனவரி 6ஆம் தேதி அன்று, அமெரிக்கர்கள் வாஷிங்டன், டி.சி.யில் அதிக எண்ணிக்கையில் கூடினர்.
தேர்தல் முழுவதும் அரங்கேறிய குற்றச் செயல்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்