பூமியில் வாழும் உயிரினங்களுக்கு அடிப்படையானது இருப்பிடம். அதுவும் மனிதனுக்கு தான் வசிக்கும் இடமான வீடு என்பது தனி ஒரு உலகம் என்ற உணர்வை வழங்கக் கூடியது. இப்போது எல்லோருக்கும் வித்தியாசமான, மற்றவர்கள் பிரம்மிக்கும் அளவில் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். பறக்கும் வீடு, மிதக்கும் வீடு என நம் கற்பனைகளில் இருக்கும் வீட்டை நிஜத்தில் வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாகதான் இருக்கும் இல்லையா? சிலருக்கு பூந்தோட்டத்தின் நடுவே வீடு வேணும். சிலருக்கும் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த வீடு வேண்டும். ஒவ்வோருவருக்கும் வீடு பற்றிய எண்ணங்கள் வெவ்வேறானவை. புதுமையானவையும் கூட. இப்படி நம் வீடு தனித்துவமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் லண்டனில் ஒருவருடைய வீடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
லண்டல் நகரில் உள்ள ரிச்மண்ட்(Richmond) என்ற பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்களது வீட்டை கண்ணாடிகளைக் கொண்டு வடிவமைத்துள்ளனர். முற்றிலும் கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டுள்ள இந்த வீடு, இருக்கும் இடம் தெரியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, வீட்டின் கூரை மற்றும் வெளிபுறத்தில் இருக்கும் கண்ணாடிகள் எதிரில் என்ன இருக்கிறதோ அதை பிரதிபலிக்கும் என்பதால், அங்கு ஒரு வீடு இருக்கிறது என்பதே தெரியாத அளவிற்கு இருக்கிறது. வீட்டின் வெளிப் புறம் முழுவதும் கண்ணாடிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள வீட்டின் புகைப்படங்களை லண்டன் ரெட்டிட் தளத்தில் ஒருவரு பதிவிடுள்ளார். இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீட்டின் சிறப்பு என்னவென்றால், வீட்டிற்கு உள்ளே இருப்பவர்களை, வெளியே இருந்து பார்க்க முடியாது. வீட்டின் உள்ளே இருப்பவர்கள் வெளியே நடக்கும் அனைத்தையும் பார்க்க முடியும்.
இந்த வீடு, 2015ம் ஆண்டிற்கு முன்பு வரை, சாதாரண வீடாகவே இருந்துள்ளது.பின், கட்டடக்கலை நிபுணர் அலெக்ஸ் ஹா (Alex Haw ) என்பவர், இந்த வீட்டை கண்ணாடிகளை வைத்து மறுவடிவமைத்தார்.
இது குறித்து வீட்டின் உரிமையாளர் லண்டன் பத்திக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், ’எங்கள் வீடு சாதாரணமாகவே இருந்தது. ஆனால் நாங்கள் இதை மாற்ற விரும்பினோம். அப்போது எங்கள் வீட்டின் வடிவமைப்பாளர் அலெக்ஸ் ஹா மேகங்கள், மரங்களின் அசைவு அனைத்துமே உங்கள் வீட்டின் கூரையில் பிரதிபலிக்கும். அதாவது, உங்கள் வீடு சுற்றுச்சூழலுடன் பேசும் விதமாக இருக்கும் என்றார். எங்களுக்கு அவர் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. இப்போது வீடு மிகவும் அழகாக மாறியுள்ளது.’ என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்