கொரோனா 2019 டிசம்பர் தொடங்கி இன்றளவும் அன்றாடச் செய்திகளில் இடம்பெற்றிருக்கும் ஒரு வார்த்தை. ஒரு வகையில் சமீப காலங்களில் உலக மக்களால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தையாகக் கூட இருக்கும். உயிர்களைக் காவு வாங்கி உலக பொருளாதாரத்தை பதம் பார்த்து மனித குலத்தையே புரட்டிப் போட்ட கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 60 கோடியைக் கடந்துள்ளது என்ற ஆறுதல் தகவல் கிடைத்துள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 கோடியே 1 லட்சத்து 7 ஆயிரத்து 990 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 41 லட்சத்து 70 ஆயிரத்து 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 60 கோடியே 93 லட்சத்து 64 ஆயிரத்து 671 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 72 ஆயிரத்து 490 பேர் உயிரிழந்துள்ளனர்.


வூஹான் தொடங்கி உலகம் முழுவதும்:


சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. ஆனால் ஓமிக்ரானுக்கு பின்னர் புதிய உருமாற்றங்கள் பெரிதாக நடக்கவில்லை என்பதே ஆறுதல் செய்தி.


கொரோனா தடுப்பூசி:


இந்தியாவில் 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும்பணி தொடங்கியது. 17 ஜூலை 2022ல் 200 கோடியைத் தாண்டியது. தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய 18 மாதங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியா மீண்டும் சாதனை படைத்துள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 200 கோடியைத் தாண்டியதற்காக இந்தியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். நாட்டின் தடுப்பூசி இயக்கம் ஒப்பிட முடியாத உயரத்தையும், வேகத்தையும் அடைந்துள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்தவர்களை எண்ணி பெருமை கொள்கிறேன். கொரோனா தொற்றுக்கு எதிரான உலகளாவிய போரை இது வலிமைபெறச் செய்தது" என பதிவிட்டிருந்தார்.






இந்தியாவில் ஆரம்பத்தில் கோவாக்சின், கோவிஷீல்டு என்று இரண்டு தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த நிலை மாறி இப்போது பல வயதினருக்கும் ஏற்ப பல்வேறு தடுப்பூசிகள் உள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. 15 - 17 வயது உடையவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.  இதுதவிர 12 - 17 வயது உடையவர்கள், கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த விரும்பினால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம். அதேபோல் 12 - 17 வயது உடையவர்கள் தனியார் மருத்துவமனைகளில் "கோவோவேக்ஸ்' தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.