அமெரிக்காவில் படகின் மிக அருகில் சென்று எகிறிக் குதித்து அலற விட்ட ராட்சத திமிங்கலத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.


கடலின் சுவாரஸ்யமான மற்றும் புதிரான விலங்குகளில் ஒன்று திமிங்கலம். ஒரு இனமாக, திமிங்கலங்கள் பொதுவாக வன்முறையுடன் நடந்து கொள்பவை அல்ல. மனிதர்களிடம் அவை பொதுவாக ஆக்ரோஷமாக நடந்து கொள்வதில்லை.


ஆனால் அவை அச்சுறுத்தப்பட்டதாகவோ, பயமாகவோ உணரும் தருணங்களில் தங்களை தற்காத்துக் கொள்ள சில சூழல்களில் தாக்குதலில் ஈடுபடுகின்றன.


திமிங்கலங்களில் ஒருவகை இனமான ஹம்ப் பேக் திமிங்கலம் எனப்படும் கூம்பு திமிங்கலங்கள் இவற்றில் இன்னும் சுவாரஸ்யமானவை.


உலகில் உள்ள பெருங்கடல்கள் வழியாக அதிக தூரம் பயணிக்கும் இந்த திமிங்கலங்கள் தங்களது பெரிய உருவத்துக்காகவும் பாடல்களுக்கும் பிரசித்தி பெற்றவை.


இந்நிலையில் அமெரிக்காவில் படகு ஒன்றின் மிக அருகில் சென்று எகிறிக் குதித்து அலற விட்ட கூம்பு திமிங்கலம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. நியூஜெர்சியில் தந்தை - மகன் இருவர் படகில் மீன்பிடிக்கச் சென்றநிலையில் படகின் மிக அருகில் வந்து இந்த ராட்சத திமிங்கலம் எகிறி டைவ் அடிக்கிறது. 


 






இந்த வீடியோவைப் படம் பிடிக்கும் மகன் சாக் பில்லர்(23) திமிங்கலத்தை அருகில் பார்த்த அதிர்ச்சியிலும் உற்சாகத்திலும் அலறுவது இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்களைப் பெற்று வைரலாகி உள்ளது.


தங்களது வித்தியாசமான ஓசை, பாடல்களுக்காக புகழ்பெற்ற இந்த ஹம்ப் பேக் திமிங்கலங்கள், பறவைகள் மற்றும் மனிதர்களிடமிருந்து கூட இந்த ஒலிகளை கற்றிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


ஹம்ப் பேக் திமிங்கலங்கள் பாடல்களை கடலில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தாண்டியும் கேட்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக திமிங்கலம் ஒன்று கடலின் மேல்பரப்பிற்கு வந்து ரெயின்போ பிரீத் எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.


 






திமிங்கலங்களுக்கு தலைக்கு கீழ் ஒரு மூச்சு குழல் (ரெஸ்பிரேட்டரி ஆர்கன்) உள்ளது. அதை கொண்டு நீருக்குள் இருக்கும்போது நீரை உறிந்து லேசாக தலையையும் உடலின் சிறு பகுதியையும் நீர்மட்டத்திற்கு மேல் கொண்டு வந்து காற்றில் நீரை சாரலாக பீய்ச்சி அடிக்கையில்,  சாரலாக செல்லும் நீரில் சூரியனின் ஒளிக் கதிர்கள் பட்டு வானவில்லின் நிறங்களாக தெரிந்து மறையும். இந்த அற்புத காட்சியையே ’ரெயின்போ பிரீத்’ என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.