இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை கடந்த 2005- 06 காலகட்டத்தை ஒப்பிடுகையில் 2019-21 காலத்தில் 41.5 கோடியாக சரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது ஒரு வரலாற்று மாற்றம் என்று ஐ.நா சபை பாராட்டியுள்ளது. இதனால் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கின் மூலம் 2030-க்குள் இந்தியாவில் வறுமையில் உள்ளோரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடியும் என்று நம்புவதாக ஐ.நா. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தெரிவித்துள்ளனர்.


2022-ஆம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் (GHI) இந்தியா 107-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்தை ஒப்பிடுகையில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. 121 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 107-வது இடத்தை பிடித்திருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது.  அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அறிக்கை, தவறான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்நிலையில்தான் ஐ.நா. இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையை 2020 மக்கள் தொகை தரவுகளின் அடிப்படையில் தயாரித்துள்ளது. இந்தியாவில் 22.89 கோடி ஏழைகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக நைஜீரியாவில் 9.6 கோடி ஏழைகள் உள்ளனர். ஒரு பக்கம் வளர்ச்சி கண்டாலும் மறுபுறம் இந்திய மக்கள் தொகையானது கொரோனா பெருந்தொற்று பிரச்சனை, அதிகரிக்கும் உணவு, எரிபொருள் விலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கொள்கைகளால் தேசிய அளவில் ஊட்டச்சத்து மற்றும் எரிபொருள் பிரச்சனைக்கு இந்திய அரசு முக்கியத்துவம் வழங்கி வருகிறது.


2019-2021 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் இன்னும் 9.7 கோடி குழந்தைகள் ஏழ்மையில் இருக்கின்றனர். இது உலகின் வேறு எந்த நாட்டிலும் ஆண், பெண், குழந்தைகள் என அனைத்து ஏழைகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் அதிகம். இருப்பினும் இந்திய அரசு மேற்கொண்டுவரும் பல்முனை நடவடிக்கையால் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வாழ்க்கை நிலை முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


111 நாடுகளில் தொகுக்கப்பட்ட அறிக்கையின்படி, 100.2 கோடி மக்கள் அதாவது 19.1 சதவீதம் பேர் பலவகையிலான வறுமையில் இருக்கின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது 59 கோடி பேர் 18 வயதிற்கும் குறைவானோர் குழந்தைகள். வளரும் நாடுகளில் ஏழைகளின் நிலைமை 4 காரணிகளைக் கொண்டு கணிக்கப்படுகிறது. முதலாவது ஊட்டச்சத்து, இரண்டாவது சமையல் எரிபொருள், மூன்றாவது தூய்மை, கடைசியானது வீட்டு வசதி.


வறுமை குறைந்தாலும் சமூக ஏற்றத்தாழ்வு குறையவில்லை:
வறுமை குறைந்தாலும் இந்தியாவில் சமூக ஏற்றத்தாழ்வு குறையவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வறுமையில் உள்ளோரின் எண்ணிக்கை 21.2 சதவீதமாக உள்ளது. அதே வேளையில் நகர்ப்புறங்களில் வறுமையில் உள்ளோரின் எண்ணிக்கை 5.5 சதவீதமாக உள்ளது. அதேபோல் குழந்தைகள்தான் வறுமையில் வாடுவோரில் முதன்மையானவர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் 5-இல் ஒரு குழந்தை வறுமையில் இருக்கிறது.  அதேபோல் ஆசியாவிலேயே பெண் தலைமை வகிக்கும் வீட்டில், ஆண் தலைமை வகிக்கும் வீட்டைவிட வறுமை அதிகமாக இருக்கிறது. பெண் தலைமை வகிக்கும் வீடுகளில் 19.7 சதவீதம் பேர் வறுமையில் இருக்க ஆண் தலைமை வகிக்கும் வீடுகளில் இந்த வறுமை நிலை 15.9 சதவீதமாக இருக்கிறது.


இந்தியாவில் ஏழைக் குடும்பங்களில் 7-இல் ஒரு வீடு பெண் தலைமையில் இருக்கிறது. அப்படியென்றால் 39 மில்லியன் ஏழை மக்கள் பெண் தலைமை வகிக்கும் வீடுகளில் உள்ளனர் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.


ஏழை மாநிலங்களின் பட்டியலில் பிஹார், ஜார்க்கண்ட், மேகாலயா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒதிஷா, சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.