உலகின் சோகமான கொரில்லாவான புவாவை அதன் உரிமையாளர் தொடர்ந்து விடுவிக்க மறுத்து வருவது விலங்கு நல ஆர்வலர்களிடையே கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. புவா நொய் (சிறிய தாமரைப்பூ என்று அர்த்தம்) எனும் பெயர் கொண்ட இந்த கொரில்லா கடந்த 1990ம் ஆண்டு தாய்லாந்தின் படா (PATA) ஷாப்பிங் மாலுக்கு சொந்தமான மிருகக்காட்சி சாலைக்கு ஒரு வயதாக இருந்தபோது ஜெர்மனியில் இருந்து வாங்கி அழைத்து வரப்பட்டுள்ளது.


தற்போது 33 வயதாகும் இந்த கொரில்லா, அன்று தொடங்கி இன்று வரை இந்த ஷாப்பிங் மாலுக்கு மேலே உள்ள மிருகக்காட்சி சாலையிலேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளது.


 






தாய்லாந்து நாட்டில் உள்ள விலங்கு உரிமைகள் நல அமைப்பான பீட்டா, பாப் பாடகர் செர் ஆகியோர் குரல் கொடுத்தும், படா ஷாப்பிங் மால் உரிமையாளர்கள் புவாவை விடுவிக்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.


மேலும், இந்த கொரில்லா மற்ற கொரில்லாக்களுடன் ஜெர்மனியில் உள்ள சரணாலயத்துக்கு மாற்றப்பட வேண்டும் என்று விலங்கு நல ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


புவா நொய் தன் ஒரு வயது தொடங்கி 32 ஆண்டுகளாக தனது வாழ்நாள் முழுவதையும் துருப்பிடித்த கம்பிகளின்  பின் கூண்டுக்குள்ளேயே கழித்துள்ளது. இந்த கொரில்லாவின் சுதந்திரத்துக்காக பலரும் போராடி வரும் நிலையில், இதன் உரிமையாளர்கள் 7,80,000 டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் ஆறு கோடி ரூபாய்)  குறைவாக புவாவை விற்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வளவு பெரிய தொகை கொடுக்க எவரும் முன்வராததால் புவாவை விடுவிக்கும் முயற்சிகள் தோல்வியைத் தழுவி வருகின்றன.


முன்னதாக இந்த மிருகக்காட்சிசாலையின் உரிமையாளர், தாய்லாந்து இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சாவிடம் புவாவை 7,82,000 அமெரிக்க டாலர்களுக்கு விடுவிப்பதாகத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இது குறித்துப் பேசிய தாய்லாந்து அரசு தரப்பு, ”புவாவை விடுவிக்க அமைச்சகம் நிதி திரட்டும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து வருகிறது, ஆனால் மிருகக்காட்சிசாலையின் உரிமையாளர்களுக்கு செலுத்த போதுமான பணத்தை சேகரிக்க முடியவில்லை.


புவா நொய்யின் விடுதலைக்காகவும் நிதி திரட்டுவதற்காகவும் கடந்த காலங்களில் நாங்கள் பிரச்சாரம் செய்தோம். புவா நொய்யின் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடைகளை சேகரித்தோம். ஆனால் உரிமையாளர் புவா நொய்யை மிக அதிக விலைக்கே விற்கவே முன் வருகிறார்" எனத் தெரிவித்துள்ளது.


மேலும் கொரில்லா புவா நொய் தனிப்பட்ட சொத்தாக கருதப்படுவதால், இது குறித்து சட்டப்பூர்வமாக எதுவும் செய்ய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 






முன்னதாக புவா குறித்துப் பேசிய பீட்டா ஆசியாவின் மூத்த துணைத் தலைவர் ஜேசன் பேக்கர்,  ”புவாவின் நிலை கொடூரமானதாகவும் அச்சமூட்டுவதாகவும் உள்ளது. மிருகக்காட்சிசாலையில் அனைவரும் அழுத்தம் கொடுங்கள்.


இந்த விலங்குகளுக்கு பீட்டா உதவவும்,  தங்கள் உடல், மனம் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மரியாதைக்குரிய சரணாலயங்களுக்கு அவற்றை மாற்றுவதற்கான முயற்சிகளுக்கும் வழிவிட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.